கலெக்டர் அலுவலக வளாகத்தில் தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம்
திருப்பூர்; திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே அமைக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டம், 2009ல் உதயமானது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (ஆர்.டி.ஓ.,) அலுவலகங்கள் வடக்கு - தெற்கு என பிரிக்கப்பட்டது. குமார் நகர் கதர்வாரிய அலுவலகத்தில் செயல்பட்டு வந்த வடக்கு அலுவலகத்துக்கு புதிய கட்டடம், வேலம்பாளையம் - சிறுபூலுவப்பட்டி ரிங் ரோட்டில் அமைக்கப்பட்டது.தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் வீரபாண்டி பிரிவில் கால்நடைத்துறைக்கு சொந்தமான வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2019ல் அலுவலகத்துக்கான இடம் தேடும் பணி துவங்கியது. நொச்சிபாளையம் பிரிவில் தற்காலிகமாக ஒரு 'டெஸ்ட்டிங் மைதானம்' தேர்வு தனியார் இடத்தில் தேர்வு செய்யப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டு வந்தது. அங்கேயே புதிய வாகன பதிவுக்கான ஒப்புதலும் நடந்தது.அலுவல் ஆவணங்களில் கையெழுத்திட மட்டும் அதிகாரிகள் அலுவலகம் வந்தனர். ஆய்வாளரில் இருவரில் ஒருவர் அல்லது இருவரும் மைதானத்தில் இருக்க நேர்ந்தது. மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடத்த இடமில்லாத சூழலில், புதிய கட்டடம் கட்டப்பட வேண்டும் என பத்துக்கும் அதிகமான முறை கருத்துரு தொடர்ந்து தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.இடுவாய் - இடுவம்பாளையம் ரோட்டில் அறநிலையத் துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு, ஒப்புதல் கிடைக்கும் நேரத்தில், கிடைக்காமல் போனது. தொடர்ந்து, 15 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறையிடம் ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் மன்றாடி வந்தனர். இந்நிலையில், திருப்பூர், பல்லடம் ரோடு வித்யாலயம் அடுத்த சுண்டமேடு பகுதியில், 1.50 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, ஒப்புதல் கிடைத்துள்ளது. கிடைத்ததிலும் ஒரு சிக்கல்
இங்கு புதிய அலுவலகம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என கருத்துரு அனுப்பப்பட்டது. இந்த கருத்துருவுக்கு, 'கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிய 'ஸ்மார்ட்' அலுவலகம் கட்டப்பட உள்ளது. இந்த அலுவலகத்தில் தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்; சுண்டமேடு புதிய இடத்தில் 'டெஸ்டிங் கிரவுண்ட்' அமைக்க ஏற்பாடு செய்யப்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடகை கட்டடத்தில் இல்லாமல், சொந்த பயன்பாட்டு இடத்தில் வந்தால் போதும் என்பதால், இதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. விரைவில் புதிய இடத்தில் 'டெஸ்டிங் கிரவுண்ட்' செயல்பட உள்ளது.