அரசு மருத்துவமனையில் பிரத்யேக குழு
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் தினமும் 97 முதல் 99 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகிறது.அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தாலுகா அளவிலான அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவற்றில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை துவங்கியுள்ளது.மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் (பொறுப்பு) பத்மினி கூறியதாவது:பொது மருத்துவர், குழந்தை நல மருத்துவர் ஆகியோர் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தோல்நோய், சருமபிரச்னை, ஒவ்வாமை, நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றுக்கு தக்க ஆலோசனை வழங்குவதுடன், தேவையான மருத்துவ சிகிச்சைகளுக்கும் பரிந்துரைப்பர்.நீர்ச்சத்து குறைபாடு இருந்தால் உடனடியாக, ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்படும். முன்னெச்சரிக்கையாக ஓ.ஆர்.எஸ்., கரைசல் தேவைப்படுவோருக்கு வினியோகிக்கப்படுகிறது. மாவட்ட சித்தா மருத்துவமனையில் நிலவேம்பு கஷாயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாக்கு, உதடு வறட்சியை உணரும் போது, கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலின் நீர்த்தேவை ஒவ்வொரு உடலுக்கும் அவர்களது உடல் எடை, உயரத்துக்கு ஏற்ப மாறுபடும். போதுமான அளவு சுத்தமான தண்ணீர் அடிக்கடி அருந்த வேண்டும்.உடலில் கொப்பளங்கள் அதிகமாக உருவானால், எரிச்சல், ஒவ்வாமை பாதிப்பு இருந்தால், டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.இவ்வாறு, பத்மினி கூறினார்.பெற்றோருக்கு பயம் வேண்டாம்''சின்னம்மை, தட்டம்மை பாதிப்புகளுக்கு தேவையான தடுப்பூசிகள் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு அத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டாலும், அவை சரியாகிவிடும். பெற்றோர் பயப்பட வேண்டாம்'' எனக் கூறுகிறார் டீன் (பொறுப்பு) பத்மினி.பேரிடர் மேலாண்மைஆணையம் அறிவுரை'கத்திரி வெயில்' எனப்படும் அக்னி நட்சத்திரம், மே 4ல் துவங்கி, 28ம் தேதி வரை நீடிக்கப்போகிறது. கடந்த சில வாரங்கள் முன் பெய்த கனமழையால் வெப்பதாக்கம் தணிந்தது. மழை பெய்யாமல், வெயில் கொளுத்துவதால், இனிவரும் நாட்கள் சவாலாக இருக்குமென, மக்கள் அச்சமடைந்துள்ளனர். மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், வெப்ப சலன தாக்கத்தில் இருந்து, மக்கள் தற்காப்புடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு தேவையான அறிவுரைகளை ஆணையம் வழங்கியுள்ளது. துப்புரவுப்பணியாளர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், கால்நடைப் பராமரிப்பு என பொதுமக்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.