உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேகமில்லா விரைவுச்சாலை! ஏழு ஆண்டுகளாக பணி இழுபறியாவதால் சிக்கல்; சந்திப்பு பகுதியில் விபத்து, உயிரிழப்பு அதிகரிப்பு

வேகமில்லா விரைவுச்சாலை! ஏழு ஆண்டுகளாக பணி இழுபறியாவதால் சிக்கல்; சந்திப்பு பகுதியில் விபத்து, உயிரிழப்பு அதிகரிப்பு

உடுமலை; பொள்ளாச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ஒரு பகுதி பணிகள் நிறைவடையாமல் இழுபறியாகி வருவதால், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், 160 கி.மீ., நீளம் ரோடு, 60 மீட்டர் அகலத்தில், நான்கு வழிச்சாலையாக மாற்ற, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) திட்டமிட்டு, கடந்த, 2018ல் பணிகள் துவங்கியது.இதில், திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் - மடத்துக்குளம் மற்றும் மடத்துக்குளம் முதல் பொள்ளாச்சி வரை, என மூன்று பிரிவுகளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இரு ஆண்டுகளில் பணிகள் நிறைவு பெற்று, பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, நிலம் எடுப்பு, ரோடு அமைத்தல், மின் கம்பங்கள் மாற்றி அமைத்தல், சர்வீஸ் ரோடுகள், உயர் மட்ட பாலங்கள், கீழ்ப்பாலங்கள் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதில், திண்டுக்கல் முதல் மடத்துக்குளம் வரையிலான இரு பிரிவுகளில் பணி நிறைவு பெற்று, கடந்த இரு ஆண்டுக்கு முன், வாகன போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டது. இதற்காக ஒட்டன்சத்திரம் பகுதியில், சுங்கச்சாவடியும் அமைக்கப்பட்டது.இந்த ரோட்டை, தினமும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தி வரும் நிலையில், மடத்துக்குளம், உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் பணிகள் இழுபறியாகி வருகிறது.

ஆமை வேகத்தில் பணி

மடத்துக்குளம் முதல் பொள்ளாச்சி வரையிலான, ஒரு பிரிவு ரோடு பணி, ஏழு ஆண்டுகளாக இழுபறியாகி வருகிறது. பிரதான ரோடுகள் மற்றும் கிராம ரோடுகளை இணைக்கும் பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்கு மத்தியில் பணி, 'ஆமை' வேகத்தில் நடந்து வருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், திண்டுக்கல்லிருந்து, கோவைக்கு வரும் வாகனங்கள் மடத்துக்குளம் வரை வந்து, மீண்டும் 'அரை குறை' பணியாக நடந்து வரும் நான்கு வழிச்சாலையில் பயணிக்கும் போது, தொடர் விபத்துக்கள், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.கடந்த ஒரு ஆண்டில், நுாற்றுக்கணக்கான விபத்துக்கள் நடந்து, ஏராளமான உயிர்கள் பலியாகி வருகிறது.அதே போல், திட்ட வடிவமைப்பிலும் குளறுபடிகள் உள்ளதால், இது குறித்து பொதுமக்கள் தரப்பில் பல புகார்கள் அளித்தும், அதிகாரிகள் ஆய்வு செய்தும் தீர்வு காணப்படவில்லை. வேடபட்டி, ராஜாவூர் என ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் பல கிராமங்கள், நான்கு வழிச்சாலையால் துண்டிக்கப்பட்டுள்ளது.அதே போல், பாலப்பம்பட்டி பகுதியில், பழைய ரோட்டுடன் இணையும் பகுதியில், தொடர் விபத்து ஏற்பட்டு வரும் நிலையில், உயர் மட்ட பாலம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டும்.உடுமலை நகர பகுதியில், பழநி ரோடு, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, பெதப்பம்பட்டி ரோடு என பல ரோடுகளின் குறுக்கே, நான்கு வழிச்சாலை அமைந்துள்ள நிலையில், இந்த ரோட்டில் வரும் வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் பயணிக்க, மேலே ஏற முடியாத நிலையும், கீழே இறங்க முடியாமலும் அமைக்கப்பட்டுள்ளது.இதனால், இந்த ரோடுகளில் வரும் வாகனங்கள் அந்தியூர் பகுதிக்கு செல்லும் வரை, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, பணி நடந்து வருவதால், இரு புறமும் உள்ள கிராம மக்கள், நகர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதோடு, பல இடங்களில், பாதியில் நிறுத்தப்பட்ட பாலங்கள், ரோடுகள் என ஆபத்தான நிலையில் உள்ளது.கடந்த ஒரு மாதமாக, உடுமலை பகுதிகளில் எந்த பணியும் நடக்காமல், முடங்கியுள்ளது. எனவே, நான்கு வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க, நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6 இடங்களில் பணி

இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடு, உள்ளிட்ட 6 இடங்களில் மட்டும் இணைப்பு சாலை பணிகள் நடந்து வருகிறது. இரண்டு மாதங்களில் பணி நிறைவுபெற்று பயன்பாட்டுக்கு வரும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை