ஊராட்சிகளில் வீணாகும் விளையாட்டு உபகரணங்கள்; செயல்பாடுகளை அப்டேட் செய்ய உத்தரவு
உடுமலை; ஊராட்சிகளிலுள்ள மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில், அரசு சார்பில் வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள், பயன்பாடின்றி வீணாக உள்ளதால், தினமும் செயல்பாடுகளை 'அப்டேட்' செய்ய வேண்டும்' என, கிராம ஊராட்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிராம இளைஞர்கள் மத்தியில் விளையாட்டை ஊக்குவிக்க, விளையாட்டு உபகரணங்களுடன், டீ சர்ட்களும் வழங்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, விளையாட்டு ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் விளையாட்டு மன்றத்தினர், அந்த விளையாட்டு உபகரணம் மற்றும் உடைகளை பயன்படுத்தி, தினசரி விளையாட்டு பயிற்சி பெற வேண்டும்; விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு, கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கிராம ஊராட்சிகளுக்கு, 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள பெரும்பாலான ஊராட்சிகளில், இந்த விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படாமல், ஊராட்சி மன்ற அலுவலகங்களிலேயே காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன. இது குறித்த புகார் அரசின் கவனத்துக்கு சென்ற நிலையில், முறையாக பயன்படுத்தும் வகையில் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலியில், 'கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்' என்ற பெயரில் பிரத்யேக பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் அந்த விளையாட்டு உபகரணங்களின் பயன்பாடு, அவற்றை விளையாட்டு வீரர்கள் எந்தளவு பயன்படுத்துகின்றனர் என்பது போன்ற விபரங்களை புகைப்படம் எடுத்து, அந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, ஊராட்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும்பாலான ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களே பராமரிக்காமல், சிதிலமடைந்தும், அழிக்கப்பட்டும் உள்ள நிலையில், ஊராட்சி செயலர்கள் திணறி வருகின்றனர். ஒரு சில பகுதிகளில், மாணவர்கள், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி, அவர்கள் விளையாடுவதை புகைப்படம் எடுத்து, செயலி வாயிலாக பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஒரு சிலர் பள்ளிகளில் சென்று போட்டோ எடுத்து அனுப்பி வருகின்றனர்.