நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் துவக்கம்
திருப்பூர்: 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம், வெள்ளகோவில் புனித அமலா அன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது. முகாமை, கலெக்டர் மனிஷ் நாரணவரே முன்னிலையில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் துவக்கி வைத்தனர். திருப்பூர் மாவட்டத்தில், 13 ஒன்றியங்களில், 39 முகாம்களும், மாநகராட்சியின் நான்கு முகாம் உட்பட, மொத்தம், 43 முகாம்கள் நடக்க உள்ளது. சிறப்பு மருத்துவ சேவை, புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, காப்பீடு திட்ட அட்டை வழங்குதல், நலவாரிய அட்டை வழங்குதல், ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., - எக்கோ, எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் நடக்க உள்ளது. அனைத்து உபகரணங்களும், மருத்துவமனைகளில் இருந்து எடுத்துவரப்பட்டு, முழுமையான பரிசோதனை நடக்கிறது. பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, மகப்பேறு மருத்துவம், குழந்தை நலம், இருதயத்துறை, நரம்பியல்துறை, தோல் சிகிச்சை, பல் மருத்துவம், காது மூக்கு தொண்டை, மனநலம் என, அனைத்து வகையான சிகிச்சையும் அளிக்கப்படும். சித்தா மற்றும் ஆயுர்வேத சிகிச்சையும் அளிக்கப்படும். ரத்தத்தில் யூரியா அளவு, கிரியேட்டினன் அளவுகளும் கட்டாயமாக பரிசோதிக்கப்படுகிறது; 40 வயதுக்கு மேற்பட்டவருக்கு, இ.சி.ஜி., எடுக்கப்படுகிறது. பெண்கள், 30 வயதுக்கு மேற்பட்டிருந்தால், கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனையும் நடக்கப்படுகிறது. அதிநவீன முறையில் ஆதார் எண் அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது. 'பார்கோடு' உருவாக்கத்தில், ஆய்வக முடிவுகள் அளிக்கப்படுகிறது. புதிய சாப்ட்வேர் மூலமாக, பதிவு செய்வது, பரிசோதனை, மருந்து பரிந்துரை, ஆய்வக முடிவுகள் ஆகிய அனைத்தும், இணைய தளம் வழியாக, மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் கண்காணிக்கப்படுகிறது. முகாமில், மருந்து பெட்டகம் மற்றும் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம், தாட்கோ திட்டம்சார்பில், துாய்மை பணியாளர் நலவாரிய அட்டை மற்றும் நல உதவி வழங்கப்பட்டது. அமைச்சர்கள், நல உதவிகளை வழங்கினர்.