உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருப்பூர்; திருப்பூரில் இன்று முதல் மீண்டும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடத்தப்பட உள்ளன. திருப்பூர் மாநகராட்சியில், மண்ணரை, சென்னியப்பா நகரிலுள்ள சண்முகதேவர் முத்தம்மாள் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், நான்கு கட்டங்களாக, 325 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 120 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. கடந்த 15ல் துவங்கி, 24 முகாம் நடத்தப்பட்டன. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா, திருப்பூர் மற்றும் உடுமலையில் நடப்பதாக இருந்தது. அதனால், 22, 23 தேதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள், ரத்து செய்யப்பட்டு, வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சையில் உள்ளதால், முதல்வரின் திருப்பூர் வருகை ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதால், கடந்த 22, 23 தேதிகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடத்தப்படவில்லை. இதனால், இன்று முதல் மீண்டும், திட்டமிட்டபடி முகாம்கள் நடைபெற உள்ளன. அவ்வகையில், மாநகராட்சி, 3வது மண்டலத்துக்கு உட்பட்ட 33,34,35 வார்டுகளுக்கு, மண்ணரை சென்னியப்பா நகர், சண்முகதேவர் முத்தம்மாள் திருமண மண்டபத்திலும், ஊத்துக்குளி பேரூராட்சியின் 2 முதல் ஒன்பது வார்டுகளுக்கு, ஊத்துக்குளி - திருப்பூர் ரோட்டிலுள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபத்திலும் முகாம் நடைபெறுகிறது. பல்லடம் - இச்சிப்பட்டி ஊராட்சி, கோம்பைக்காட்டுப்புதுார் சிவசக்தி மண்டபம், அவிநாசி ஒன்றியம் - தண்டுக்காரன்பாளையம், மங்கரசவலையபாளையம் ஊராட்சிகளுக்கு, தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், திருப்பூர் ஒன்றியம் - கணக்கம்பாளையம், நாதம்பாளையம் ஊராட்சிகளுக்கு, ஸ்ரீ கிருஷ்ணா மஹால், ஊத்துக்குளி ஒன்றியம் - வெள்ளியம்பதி ஊராட்சிக்கு, ஆதியூர் எஸ்.எச்.ஜி., கட்டடத்திலும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெறுகிறது. நகர பகுதிகளில், 13 அரசு துறை சார்ந்த, 43 சேவைகளும், ஊரக பகுதிகளில், 15 துறை சார்ந்த, 46 சேவைகளும் ஒரே இடத்தில், பொதுமக்களுக்கு அளிக்கப்படுகிறது. மனுக்கள் பெற சிறப்பு 'கவுன்டர்கள்' அமைக்கப்பட்டு, பெண்களிடமிருந்து மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்களும் பெறப்படுகிறது. ரேஷன் கார்டு, ஆதார், வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை முகாமுக்கு கொண்டு சென்று, மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை