உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சியில் புயல்; நகராட்சியில் துயில்

மாநகராட்சியில் புயல்; நகராட்சியில் துயில்

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு விவகாரத்தில், அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன; அருகில் உள்ள திருமுருகன்பூண்டி நகராட்சியிலோ 'அமைதி' காக்கின்றன.மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஆண்டுக்கு, 6 சதவீதம் வரி உயர்வு, அபராத வரி விதிப்பு போன்றவை, பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என்ற குரல், வலுவாக ஒலிக்க துவங்கியிருக்கிறது.திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு விவகாரமும், அரசியல் கட்சிகளின் வரிசை கட்டிய போராட்டங்களும் மாநில அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதீத வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகளை மாநகராட்சி அ.தி.மு.க.,வினர் பட்டியலிட்டதும், வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மன்றக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு, மறியல், உண்ணாவிரதம் என போராட்ட களத்தை வலுப்படுத்தியதும், மக்களின் கவனத்தை திசை திருப்பியிருக்கிறது. 'இந்த விவகாரம் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது' என்பதை உணர்ந்த தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்., - இ.கம்யூ., - மா.கம்யூ., - வி.சி.க., - முஸ்லிம் லீக் - ம.ம.க., உள்ளிட்ட கட்சிகள்; பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டன. பா.ஜ.,வும் போராட்டக் களம் இறங்கியிருக்கிறது.பூண்டி நகராட்சி 'பிள்ளையார் சுழி'இதற்கு முன்னதாகவே, திருமுருகன்பூண்டி நகராட்சியில் சொத்து வரி உயர்வு, திருப்பூர் மாநகராட்சியை விட குடிநீர் கட்டண உயர்வு என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, மா.கம்யூ., கவுன்சிலர்கள் கண்டன குரல் எழுப்பினர். இருப்பினும், திருப்பூர் மாநகராட்சியில் தென்பட்ட அதிர்வலை அளவுக்கு அது எடுபடவில்லை. இதற்கு காரணம், பூண்டி நகராட்சியில் உள்ள இரண்டு மா.கம்யூ., கவுன்சிலர்கள் மட்டுமே, சொத்து வரி உயர்வு குறித்து பேசினர்.அங்கு அ.தி.மு.க., மற்றும் இ.கம்யூ., கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில், சொத்து வரி உயர்வு விவகாரத்தில் அவர்கள் வரி உயர்வுக்குகெதிராக தங்கள் குரலை ஓங்கி ஒலிக்கவில்லை என்ற கருத்து பொதுமக்களிடம் நிலவுகிறது.--

நகராட்சி கூட்டத்தில் விவாதிக்க திட்டம்

''சொத்து வரி உயர்வு என்பது அரசின் கொள்கை முடிவு; எதுவும் செய்வதற்கில்லை'' என எழுத்துப்பூர்வ விளக்கமளித்துள்ளார் திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனர்.மா.கம்யூ., கவுன்சிலர் சுப்ரமணியம் கூறுகையில்,''சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவை மக்களை வருத்தாத வகையில் உயர்த்தியிருக்க வேண்டும். அதை விடுத்து, ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்வு; அபராத வரி என்பதை நாங்கள் எதிர்க்கிறோம்,'' என்றார்.அ.தி.மு.க., கவுன்சிலர் லதா கூறுகையில், ''சொத்து வரி உயர்வுக்கு நாங்கள் எதிர்ப்பு தான். கவுன்சிலர்கள் இணைந்து பேசி, எங்களின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க இருக்கிறோம்,'' என்றார்.துணைத்தலைவர் ராஜேஸ்வரி (இ.கம்யூ.,) கூறுகையில்,''சொத்து வரி உயர்வு தொடர்பாக எங்களின் நிலைபாடு குறித்து எதுவும் முடிவெடுக்கவில்லை. 16ம் தேதி, நகராட்சி கூட்டம் நடக்கிறது; அதில் விவாதிக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.---

அரசியல் 'கணக்கு'

தேர்தல் சமயத்தில் திருமுருகன்பூண்டி நகராட்சியில் உள்ள, 27 வார்டுகளில், தி.மு.க., சார்பில், 9 பேர்; அ.தி.மு.க., சார்பில், 10 பேர்; இ.கம்யூ., சார்பில், 5 பேர்; மா.கம்யூ., சார்பில், 3 பேர் வெற்றி பெற்றிருந்தனர். இதில், தி.மு.க., மற்றும் இ.கம்யூ., கவுன்சிலர்களின் ஆதரவுடன், தலைவர் நாற்காலியை தக்க வைத்தது தி.மு.க.,; ஆதரவு கொடுத்த இ.கம்யூ.,வுக்கு துணைத் தலைவர் பதவியும் கிடைத்தது. கூட்டணி தர்மத்தின் படி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் 'சீட்' மறுக்கப்பட்டதால், மா.கம்யூ., ஆதரவை விலக்கியது.தற்போதைய சூழலில், அ.தி.மு.க., கவுன்சிலர் தங்கவேலு, இ.கம்யூ.,வில் ஐக்கியமானார். மா.கம்யூ., கவுன்சிலர் பார்வதி, பா.ஜ.,வில் இணைந்தார். இதனால், அ.தி.மு.க., கவுன்சிலர்களின் எண்ணிக்கை, 9 ஆகவும், மா.கம்யூ.,வின் பலம், 2 ஆகவும் குறைந்தது. அதே நேரம், இ.கம்யூ., கவுன்சிலர்களின் எண்ணிக்கை, 6 ஆக அதிகரித்திருக்கிறது. மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற, 14 கவுன்சிலர்களின் ஆதரவு அவசியம் என்ற நிலையில், இ.கம்யூ., கவுன்சிலர்கள் ஆதரவில்லாமல், தீர்மானம் எதையும் நிறைவேற்ற முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ