ஓடைகள் துார்வாரும் பணிகள் துவக்கம்: மழை நீர் வடிகால்களையும் மீட்கணும்
உடுமலை: வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடுமலை நகரிலுள்ள ஓடைகள் துார்வாரும் பணி துவங்கியுள்ளது. உடுமலை நகராட்சியில், தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம், நாராயணன் காலனி ஓடை, நெடுஞ்செழியன் காலனி ஓடை, ராஜவாய்க்கால் பள்ளம் என, 10 கி.மீ., துாரம் இயற்கை நீர் வழித்தடங்களாக உள்ளன. மழைக்காலங்களில் எளிதாக, வெள்ள நீர் வெளியேறும் வகையில் இருந்த ஓடைகள் மீதான அலட்சியம் காரணமாக, ஆக்கிரமிப்புகளால் குறுகியும், சாக்கடை கழிவு நீர் வெளியேற்றும் கால்வாயாகவும், குப்பை கொட்டும் மையமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இயற்கையாக அமைந்துள்ள நீர் வழித்தடங்கள் முழுவதும் மண் மூடியும், மரம், செடிகள் முளைத்து புதர் மண்டியும், பிளாஸ்டிக் உள்ளிட்ட திடக்கழிவுகள் தேங்கியும் காணப்படுகிறது. வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், மழை வெள்ள நீர் எளிதில் வடியும் வகையில், உடுமலை நகராட்சி சார்பில், நீர் நிலைகள் துார்வாரும் பணி துவங்கியுள்ளது. ஓடைகளில் தேங்கியுள்ள கழிவுகள், முட்செடிகள் அகற்றப்பட்டு, எளிதில் மழை நீர் வெளியேறும் வகையில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதே போல், பிரதான ரோடுகளிலுள்ள மழை நீர் வடிகால்கள் ஆக்கிரமிப்புகளால் மாயமாகியுள்ளது. கடந்த வாரம் பெய்த மழையின் போது, பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, தளி ரோடு, ராஜேந்திரா ரோடு என பிரதான ரோடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, பாரபட்சமின்றி மழை நீர் வடிகால்களை மீட்டு, துார்வார நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.