உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொலிவிழந்த சுற்றுலா தலங்களை மீட்பதற்கு கோடை விழா! விடுமுறை காலத்திலும் வெறிச்சோடும் நிலை ​

பொலிவிழந்த சுற்றுலா தலங்களை மீட்பதற்கு கோடை விழா! விடுமுறை காலத்திலும் வெறிச்சோடும் நிலை ​

உடுமலை: பொலிவிழந்து காணப்படும் சுற்றுலா தலங்களை மீட்கவும், சுற்றுலா பயணியர் வசதிக்காகவும், திருமூர்த்திமலையில், வரும் கோடை விடுமுறை காலத்தில், 'கோடை விழா' நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உடுமலை பகுதி மக்களிடையே அதிகரித்துள்ளது.உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள, திருமூர்த்திமலை, அமராவதி அணை பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய சுற்றுலா தலங்களாக உள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர், கோடை விடுமுறை காலத்தில், இங்கு வந்து செல்கின்றனர்.

வசதிகள் இல்லை

இயற்கை எழில் பொங்கும், திருமூர்த்திமலையில், சுற்றுலா பயணியருக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளன. வாகனங்களை நிறுத்த போதிய இடமில்லை. படகு சவாரி பல ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கிறது.பஞ்சலிங்க அருவி பகுதியில் போதிய கழிப்பிட வசதி இல்லை. மேலும், திருமூர்த்தி அணை கரையில், பூங்கா அமைக்கும் திட்டமும், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதே போல், அமராவதி அணை பூங்காவும், பொலிவிழந்து பரிதாப நிலையில் உள்ளது. புதர் மண்டிக்கிடக்கும் அணை பூங்காவை பார்த்து விட்டு, சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.இந்த இரு சுற்றுலா தலங்களும் மேம்படுத்தப்படும் என சுற்றுலாத்துறையினரும், பல முறை அறிவிப்பு மட்டும் வெளியிட்டு வருகின்றனர். இப்பிரச்னையால், ஆண்டுதோறும், இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.சுற்றுலா வர்த்தகத்தை மட்டும் நம்பியுள்ள அப்பகுதியினர், வாழ்வாதாரத்துக்காக மாற்றுத்தொழிலுக்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

மக்கள் எதிர்பார்ப்பு

திருமூர்த்திமலை மற்றும் அமராவதி அணை ஆகிய சுற்றுலா தலங்களுக்கு, சுற்றுலா பயணியரை அதிகளவு ஈர்க்கவும், நீர்நிலைகள், வனம், மேற்குத்தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கோடை விழா போன்ற சிறப்பு விழாக்களை நடத்த நீண்ட காலமாக எதிர்பார்ப்பு நிலவுகிறது.முன்பு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், திருமூர்த்திமலையில், ஆடிப்பெருந்திருவிழா நடத்தப்பட்டு வந்தது. பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, அரங்கு அமைக்கப்பட்டு, சுற்றுலா பயணியருக்கு, போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.இந்த விழாவும், பல ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. எனவே, வரும் கோடை விடுமுறை சீசனில், திருமூர்த்திமலையில், அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, கோடை விழா நடத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனால், அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன் பொலிவிழந்து காணப்படும், சுற்றுலா தலங்களை மேம்படுத்தலாம்; உள்ளூர் மக்களும் பயன்பெறுவார்கள்.எனவே, சுற்றுலா பயணியரை கவரும், கண்காட்சி உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி, கோடை விழா நடத்த வேண்டும் என உடுமலை பகுதி மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகளை விரைவில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் துவக்க வேண்டும்.

அசத்தும் கேரளா

உடுமலை அருகே கேரளாவில் அமைந்துள்ள மறையூர், காந்தலுார், மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.வார விடுமுறை நாட்களிலும், உடுமலை வழியாக மறையூர் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், வழித்தடத்திலேயே அமைந்துள்ள திருமூர்த்திமலை, அமராவதி அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணியர் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலையை மாற்ற தமிழக அரசு சுற்றுலாத்துறை வாயிலாகவும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
டிச 30, 2024 06:47

இதுக்கெல்லாம் நேரமும்.இல்லை. நிதியும் இல்லை. பிரியாணி அரசியலை நடத்தவே விடியலுக்கு சரியாப் போயிடுது.


சமீபத்திய செய்தி