மானியத்தில் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வினியோகம்
உடுமலை; தென்னையில் ஊடுபயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், மானியத்தில் இடுபொருட்கள் பெற, தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கலாமணி கூறியிருப்பதாவது: தென்னை பரப்பு விரிவாக்க திட்டத்தின் கீழ், உடுமலை வட்டாரத்தில், 20 ெஹக்டேர் பரப்பளவுக்கு, மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் கீழ், புதிதாக தென்னை நடவு செய்யும் விவசாயிகளுக்கு, நெட்டை குட்டை ஒட்டு ரக தென்னங்கன்று மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. பரப்பு விரிவாக்க திட்டத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள், நில உரிமைச்சான்று, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வங்கி பாஸ் புக் ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். தென்னங்கன்றுகளுக்கு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க, கூடுதலாக வயல் வரைபடம் மற்றும் கூட்டு வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும். தென்னந்தோப்பில் ஜாதிக்காய் மற்றும் வாழை சாகுபடி செய்துள்ளவர்களுக்கு மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. ஊடுபயிர் சாகுபடி செய்துள்ளவர்கள் சிட்டா, ஊடுபயிர் சாகுபடி செய்துள்ள விபரத்துடன் கூடிய அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களுடன், தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.