கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்ற அளவீடு மும்முரம்
அவிநாசி: அவிநாசி தாலுகா, பழங்கரை ஊராட்சி, தேவம்பாளையத்தில் (க.ச.எண் 277/1) பழமையான ஸ்ரீ பூமி நீளா சமேத அழகு மாயவர் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, கடந்த 2015ல் கற்கோவில் கட்டுமான பணிகள் திட்டமிடப்பட்டு துவங்கியது. இந்நிலையில் கோவில் சுற்றுச் சுவர் கட்டுமான பணிகளுக்கு கோவிலை ஒட்டியே, வீட்டை கட்டிய ஒருவர் இடையூறு செய்து வருவதாகவும், அவருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து கோவில் நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் சார்பில் தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது. இதற்காக அவிநாசி தாசில்தார் முன்னிலையில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது குறித்து திருப்பூர் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன்பேரில், நேற்று பழங்கரை கிராம நிர்வாக அலுவலர் லதா, சர்வேயர் போஜராஜன் உள் ளிட்டோர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலங்களை அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர். அறிக்கையை கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோரிடம் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என அலுவலர்கள் கூறினர்.