உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஆட்டோ டிரைவர்களுடன் பேச்சு: எந்த முடிவும் எட்டப்படவில்லை

 ஆட்டோ டிரைவர்களுடன் பேச்சு: எந்த முடிவும் எட்டப்படவில்லை

பல்லடம்: பல்லடம் பஸ் ஸ்டாண்டில், 'இன்' மற்றும் 'அவுட்' என, இரு ஆட்டோ ஸ்டாண்டுகளில், 40க்கும் மேற்பட்ட டிரைவர்கள், ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன், இதில், கூடுதலாக சிலர் இணைந்ததைத் தொடர்ந்து, எதிர்ப்பு தெரிவித்த ஆட்டோ டிரைவர்கள், குடும்பத்துடன் மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலில், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்த அனுமதி இல்லை என, நகராட்சி அறிவிப்பு பலகை வைத்ததுடன், பேரி கார்டுகளும் வைக்கப்பட்டன. இதனையடுத்து, நேற்று முன்தினம், நகராட்சி கமிஷனரை சந்தித்த ஆட்டோ டிரைவர்கள், வழக்கம்போல் தங்களுக்கு ஆட்டோ நிறுத்த அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை மன அளித்தனர். இதனை தொடர்ந்து, ஆட்டோ டிரைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. 'பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வரும் எங்களுக்கு, இதுதான் வாழ்வாதாரம் என்றும்; புதிதாக இணைந்தவர்களை தவிர்த்து, வழக்கம்போல் நாங்கள் ஆட்டோக்களை பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி இயக்க அனுமதிக்க வேண்டும்,' என, ஆட்டோ டிரைவர்கள் தங்களது கோரிக்கையை முன் வைத்தனர். நகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக நகராட்சி கமிஷனர் கூறியதால், எவ்வித முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !