தாய்மொழி மீதான ஈர்ப்பை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த கல்வியாளர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். கல்விக்கூடங்களில் தமிழ் சார்ந்த நிகழ்வுகள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன.சமீபத்தில், திருப்பூர், எல்.ஆர்.ஜி., மகளிர் அரசு கலைக்கல்லுாரியில் நடந்த முப்பெரும் விழாவில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்த கருத்துகள்:உலகின் பல இடங்களில் உள்ள தமிழர்கள், நம் தாய்மொழியை வளர்ப்பத்தில், பெரும் முயற்சி எடுக்கின்றனர். வெளிநாடுகளில் வசித்தாலும், தமிழர்களின் நலன் காப்பதில், அவர்கள் ஆர்வம் கொள்கின்றனர். தமிழ்மலர், தமிழ்ச்செல்வி, தமிழரசன் என, ஒரு மொழி சார்ந்து பெயர் சூட்டும் பண்பு, தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு; அந்தளவு உயிரோடு, உணர்வோடு கலந்த மொழியாக, தமிழ் இருக்கிறது.தமிழ்ப் பாரம்பரியம் என்பது, 4,500 ஆண்டு பழமை வாய்ந்தது. கடந்த, 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கிய காலத்திலேயே, 60 பெண் புலவர்கள் இருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு' என, பெண்கள் முடக்கி வைக்கப்பட்ட காலம் மாறி, இன்று பெண்கள், கல்வியில் கோலோச்சுகின்றனர். தமிழகத்தில் உள்ள, 18 மாவட்டங்களில், பெண்களே கலெக்டர்களாக உள்ளனர்.எங்குமில்லாத வகையில், 8 கி.மீ.,க்கு ஒரு மேல்நிலைப்பள்ளி, 10 கி.மீ.,க்கு ஒரு உயர்நிலைப்பள்ளி, மாவட்டத்துக்கு ஒரு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லுாரி உள்ள மாநிலம் தமிழகம் தான். 'மொத்த சேர்க்கை விகிதம்' (ஜி.இ.ஆர்.,) எனப்படும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு முடித்த பின், கல்லுாரி, டிப்ளமோ உள்ளிட்ட உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கையில் இந்திய அளவில், 100 பேருக்கு, 26 பேர் உயர்கல்வி செல்கின்றனர்.ஆனால், தமிழக அளவில், 100 பேருக்கு, 52 பேர் உயர்கல்வி செல்கின்றனர். அமெரிக்காவில், 100 பேருக்கு, 33 பேர்; சீனாவில், 38 பேர் என, உயர்கல்வி சேர்க்கை விகிதம் இருக்கிறது. மாணவ, மாணவியருக்கு கல்வி புரிதல் மட்டுமின்றி, அரசியல் புரிதலும் இருக்க வேண்டும்; தாங்கள் விரும்பிய அரசியலை பேச வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.சங்க இலக்கியம், ஆன்மிகம், சிறு தானியம், ஐந்தினை உள்ளிட்ட கலாசாரம், பண்பாடு சார்ந்த விஷயங்களை மாணவ, மாணவியர் கண்காட்சியாக வடிவமைத்து, தமிழ் மீதுள்ள பற்றை வெளிப் படுத்தியிருந்தனர்.