உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தென்னையை சாய்க்கும் தஞ்சை வாடல்! கட்டுப்படுத்த வழிகாட்டுதல்

தென்னையை சாய்க்கும் தஞ்சை வாடல்! கட்டுப்படுத்த வழிகாட்டுதல்

உடுமலை; தென்னை மரங்களை தாக்கும் தஞ்சாவூர் வாடல் நோய் தாக்குதல் குறித்து, கள ஆய்வு மேற்கொண்ட குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறையினர், நோய்த்தடுப்பு முறைகள் குறித்து விளக்கமளித்துள்ளனர்.குடிமங்கலம் வட்டாரத்தில், பிரதான சாகுபடியாக, 14,850 ெஹக்டேரில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால், தென்னை மரங்களில் நோய்த்தாக்குதல் பரவி, காய்ப்புத்திறன் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.இது குறித்து பூளவாடி கிராமத்தில், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் குழுவினர் நேரடி ஆய்வு செய்தனர். அதில், பரவலாக தஞ்சாவூர் வாடல் நோய்த்தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது.குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் செல்வகுமார் கூறியிருப்பதாவது:தஞ்சாவூர் வாடல் நோய் தாக்கிய மரத்தின் அடிப்பாகத்திலிருந்து, 3 அடி உயரம் வரை செம்பழுப்பு நிற சாறு வடியும். சாறு வடிந்த மரத்தின் தண்டுப் பகுதியை வெட்டி பார்த்தால், தண்டுப் பகுதிஅழுகி நிறம் மாறி காணப்படும்.மரத்தின் ஓலைகள் வெளிர் மஞ்சள் நிறமாகிய பின்பு, அடிமட்டைகள் எல்லாம் பழுப்படைந்து, காய்ந்து மரத்தோடு ஒட்டித் தொங்கும். இதை இழுத்தால் கையோடு வராது. வேர்களும் அதிகளவில் அழுகி, நிறம் மாறி, எண்ணிக்கையில் குறைந்து காணப்படும்.சில நேரங்களில் அனைத்து குரும்பைகளும், இளம் காய்களும் உதிர்ந்து விடும். மேலும், இந்நோய் அதிக அளவில் தாக்கப்பட்ட மரங்களில், 'சைலிபோரஸ்' என்ற பட்டை துளைப்பான் கூன் வண்டின் தாக்குதலும் காணப்படும்.மழைக்காலங்களில் மரத்தின் அடிப்பாகத்தில், 'கேனோடெர்மா' பூசாணத்தின் வித்துத்திரள்கள் காளான் போன்று காணப்படும். இது தடிமனாகவும், கடினமாகவும் கருஞ்சிவப்பு நிற மேல் பகுதியையும், வெள்ளை நிற அடிப் பகுதியையும் கொண்டிருக்கும்.மேற்கூறிய அறிகுறிகள் அனைத்தும் ஒருங்கே இருந்தால், மரமானது ஆறு மாதம் முதல் ஓராண்டுக்குள் கருகி விடும்.'கோனோடெர்மா லூசிடம்' என்னும் காளான் வகை பூஞ்சாணம் தாக்குவதால், தஞ்சாவூர் வாடல் நோய் ஏற்படுகிறது. ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்திற்கு, மண் மற்றும் பாசன நீர் வாயிலாக நோய் பரவுகிறது. மண்ணில் நீண்ட காலம் வாழும் தன்மையுடையது.

ஊடுபயிராக வாழை

நோய் தாக்கி இறந்த மரங்களையும், நோய் முற்றிய நிலையில் உள்ள மற்ற மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மரத்தைச் சுற்றி வட்டப் பாத்தி அமைத்து, தனித்தனியே சொட்டு நீர் பாசன முறையின் வாயிலாக நீர்ப் பாய்ச்ச வேண்டும்.ஆண்டுக்கு, 50 கிலோ மக்கிய சாண எரு மற்றும் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். வாழையை ஊடுபயிர் செய்வதால், நோயின் தீவிரத்தை குறைக்கலாம்.ஒரு சத போர்டோ கலவையை, 40 லிட்டர் என்ற அளவில் மரத்தைச் சுற்றி 2 மீ., வட்ட பாத்தியில் மண் நன்கு நனையுமாறு 15 நாட்கள் இடைவெளி முறை ஊற்றவேண்டும்.'ஹெக்சாகோனசோல்' 2 மில்லி மருந்தை, 100 மில்லி தண்ணீரில் கலந்து, மூன்று மாதத்திற்கு ஒருமுறை தஞ்சாவூர் வாடல் நோய் தாக்கிய மரங்களுக்கு வேர் வழியாக உட்செலுத்த வேண்டும்.'டிரைகோடெர்மா விரிடி' 100 கிராம் மற்றும் பேசில்லஸ்சப்டிலிஸ் 100 கிராம் நனையுமாறு, 15 நாட்கள் இடைவெளி முறை ஊற்றவேண்டும்.ஹெக்சாகோனசோல் 2 மில்லி மருந்தை 100 மில்லி தண்ணீரில் கலந்து, மூன்று மாதத்திற்கு ஒருமுறை தஞ்சாவூர் வாடல் நோய் தாக்கிய மரங்களுக்கு வேர் வழியாக உட்செலுத்த வேண்டும்.டிரைகோடெர்மா விரிடி 100 கிராம் மற்றும் பேசில்லஸ்சப்டிலிஸ் 100 கிராம் என்ற அளவில், 50 கிலோ மக்கிய சாண எருவுடன் கலந்து நோய் தாக்கப்பட்ட மரங்களின் அடியே வட்டப் பாத்தியில் உள்ள மண்ணில் இடவேண்டும்.மேலும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றிய தகவல் மற்றும் ஆலோசனைகளுக்கு, பெதப்பம்பட்டி உள்வட்ட விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ராஜசேகர் 86755 56865; சங்கவி 81110 55320 என்ற மொபைல் போன் எண்ணிலும் குடிமங்கலம் உள்வட்ட விவசாயிகள் சரவணகுமார் 97891 97648 மதன் 97867 78651 என்ற மொபைல் போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ