காலியாகிறது தடுப்பணை இருக்கிறீங்களா, ஆபீசர்ஸ்!
அவிநாசி; அவிநாசி அருகே தடுப்பணையில் சேமிக்கப்பட்டுள்ள தண்ணீர், குழாய்கள் மூலம் வெளியேற்றும் அவலம் அம்பலமாகியும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.அவிநாசி ஒன்றியம், செம்பியநல்லுார் ஊராட்சி, வீரமாத்தி அம்மன் கோவில் அருகே தடுப்பணை உள்ளது. நம்பியாம்பாளையம், சுண்டக்கம்பாளையம், கரையப்பாளையம், வெள்ளியம்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து மழைக்காலங்களில் வழிந்து வரும் மழை நீரை தேக்கி வைத்து நல்லாறு நீர்வழிப் பாதையில் உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் குட்டைக்கு நீர் வருவதற்கு ஆதாரமாக தடுப்பணை உள்ளது.அத்திக்கடவு - அவிநாசி திட்ட நீர் தடுப்பணையில் சேமிக்கப்படுகிறது. கடந்த மாதத்தில் பெய்த மழை காரணமாக, தடுப்பணை ஓரளவு நிரம்பியுள்ளது. முழு கொள்ளளவை நெருங்கியிருந்த நிலையில், ஒருவர் இந்த தடுப்பணை பகுதியில் ஒரு ஏக்கர் தனக்கு சொந்தமானது என, அப்பகுதியினரிடம் கூறியுள்ளார். தடுப்பணை நிரம்பாதவாறு பிளாஸ்டிக் குழாய்கள் வழியாக தடுப்பணையில் உள்ள நீரை வெளியேற்றும் வகையில் செய்துள்ளார். நீர் வரத்து சரியத் துவங்கியுள்ளது.பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் (திருப்பூர்) ராகுலிடம் கேட்ட போது, ''அலுவல் வேலையாக வெளியே சென்றுள்ளதால், ஊராட்சி நிர்வாகத்திடம் இதுபற்றி சொல்கிறேன். பொதுப்பணித்துறை ஊழியர் நேரில் சென்று ஆய்வு செய்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.---செம்பியநல்லுார் ஊராட்சி, வீரமாத்தி அம்மன் கோவில் அருகேயுள்ள தடுப்பணையில் பிளாஸ்டிக் குழாய்களைப் போட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கண்காணிப்பு இல்லை
காலம்காலமாக வீரமாத்தியம்மன் கோவில் அருகேயுள்ள தடுப்பணையில் நீர் நிரம்பி அதிலிருந்து உபரி நீர் வெளியேறி நல்லாற்று வழியாக அவிநாசி தாமரைக்குளத்துக்கும் தண்ணீர் செல்கிறது. தனி நபர் முறையற்ற வகையில், குழாய் அமைத்து தண்ணீரை வெளியேற்றி வருகிறார். பொதுப்பணித்துறைக்கு என தனி அலுவலகம் அவிநாசியில் இல்லை. அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால், இதுபோன்ற முறைகேடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளது. சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை அவசியம்.- பழனிசாமி, ஈரம் அறக்கட்டளை-