பட்டா இங்கிருக்குது... இடம் எங்கிருக்குது
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே , தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பக்தவத்சலம் ஆகியோர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். நேற்றைய முகாமில், வெவ்வேறு பகுதிகளில், பட்டா வழங்கியும், நிலத்தை அளந்து கொடுக்காமல் இழுத்தடிப்பது தொடர்பாக, மனுக்கள் பதிவாகின. அளந்து கொடுங்கள் தண்டுக்காரன்பாளையம், ராமியம்பாளையம் பகுதி மக்கள்:
அவிநாசி ஒன்றியத்திலுள்ள எங்கள் பகுதிகளை சேர்ந்த, 51 குடும்பங்களுக்கு, தொட்டியனுாரில் கடந்த 2024, பிப்., 9 ம் தேதியிட்ட பட்டா வழங்கப்பட்டது. ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் எங்களுக்கு இடத்தை அளந்து கொடுக்கவில்லை. பட்டாவை மட்டும் வைத்துக்கொண்டு, இடத்தை கண்டறிய முடியாமலும், சொந்தமாக வீடு கட்ட முடியாமலும் தவித்துவருகிறோம். பட்டாவுக்கான நிலத்தை உடனடியாக அளந்து கொடுக்கவேண்டும். வள்ளிபுரம் பகுதி மக்கள்:
கடந்த 2024, டிச., மாதம், துணை முதல்வர் உதயநிதி திருப்பூருக்கு வந்தபோது, அவிநாசி தாலுகா, வள்ளிபுரத்தில், 26 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. வருவாய்த்துறையினர் இன்னும் எங்களுக்கான இடத்தை அளந்து கொடுக்கவில்லை. இதுதொடர்பாக கலெக்டரிடம் தொடர்ந்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கவலை அளிக்கிறது. சோழமாதேவி கிராம மக்கள்:
மடத்துக்குளம் தாலுகா, சோழமாதேவி கிராமத்தில், 26 குடும்பங்களுக்கு, பட்டா வழங்கி எட்டு ஆண்டுகளாகிறது; இன்னும், யார் யாருக்கு எந்த இடம் என அளந்துகொடுக்கவில்லை. எங்கள் இடத்தை அளந்து கொடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும். பணிகள் முடக்க ம் துங்காவி பகுதி மக்கள்:
மடத்துக்குளம் தாலுகா, துங்காவி கிராமம், உடையார்பாளையத்தில், கள்ளி மேடு பகுதியில், கடந்த 1997ல், 80 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அப்பகுதியில் எந்த அடிப்படை வசதியும் செய்துதராததால், பட்டா இடத்தில் குடியேற முடியாமல் உள்ளோம். முந்தைய கலெக்டர் கிறிஸ்துராஜ், எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டார். குடிநீர் வசதிக்காக குழிகள் எடுக்கப்பட்டன. தற்போது அப்பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. புதிய கலெக்டர் பணிகளை வேகப்படுத்தி, அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டும். பட்டா வழங்கக்கூடாது பட்டம்பாளையம் மக்கள்:
அவிநாசி தாலுகா, பட்டம்பாளையம், கோனாபுரத்தில், அரசு வழங்கிய பட்டா நிலத்தில் 17 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், தனியார் ஒருவர், அப்பகுதியிலிருந்து வெளியேறிவிட்டார். தற்போது மீண்டும், அதே இடத்தில் பட்டா வழங்க கேட்டு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் அவருக்கு, பட்டா வழங்க கூடாது. நிதி நிறுவனத்தினர் மிரட்டல் திருப்பூர் வடக்கு தாலுகா, மொய்யாண்டம்பாளையத்தை சேர்ந்த ராதாமணி என்பவர், குடும்ப செலவுக்காக 2004 ல் வாங்கிய 12 ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்தியபோதும், நிதி நிறுவனத்தினர் வீடு மற்றும் இடத்தை அபகரித்துக்கொண்டு மிரட்டுவதாக புகார் அளித்தார். அனுமதி தாருங்கள் டூவீலர் டாக்ஸி ஓட்டுநர்கள்:
திருப்பூர் மாவட்டத்தில் ஒரு நபரை மட்டும் ஏற்றி செல்லும் டூவீலர் டாக்ஸி இயக்கி வருகிறோம். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் வரும்போது அவர்களை ஆட்டோவுக்கு அனுப்பி வைக்கிறோம். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுனர் சிலர் எங்கள் வாகனத்தை வழி மறித்து வண்டியை பறிமுதல் செய்கின்றனர். இதனால், மிகவும் சிரமம் ஏற்படுகிறது; எங்கள் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் டூவீலர் டாக்ஸி ஓட்டுவதற்கு அனுமதி அளித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மொத்தம் 435 மனுக்கள் பதிவு செய்யப்பட்டன. வாய்க்காலை காணோம் பல்லடம், நேதாஜி மக்கள் இயக்க தலைவர் முருகதாஸ், 'வாய்க்காலை காணவில்லை' என்கிற பேனரை கழுத்தில் அணிந்து வந்து, கலெக்டரிடம் மனு அளித்தார். அதில், 'பல்லடம் தாலுகா கரைப்புதுார் ஊராட்சி, அருள்புரத்திலிருந்து, அண்ணா நகர் வழியாக ருத்ரா நகரை கடந்து பி.ஏ.பி. கிளை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை ஆக்கிரமித்து, ருத்ரா நகரில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நீர் வழித்தடத்தை யார் ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் தவறு. பி.ஏ.பி., வாய்க்காலை மூடி சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வாய்க்காலை மீட்டுக் கொடுக்க வேண்டும்,' என குறிப்பிட்டுள்ளார்.