கணக்கு போட்டது 12.. பிணக்கு எழுந்ததால் 2 மாநகராட்சியுடன் இணையும் ஊராட்சி எண்ணிக்கை குறைப்பு: பின்னணி என்ன?
திருப்பூர் மாநகராட்சி விரிவாக்கம் செய்வதில், முன்னர் 12 ஊராட்சிகள் இடம் பெறும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. பொதுமக்கள் எதிர்ப்பால், 2 ஊராட்சிகள் மட்டுமே இணைக்கப்பட உள்ளன. இது, ஊராட்சி நிர்வாகங்களுக்கு மட்டுமின்றி, மாநகராட்சிக்கும் நிம்மதியை அளித்துள்ளது. இதுகுறித்த விரிவான பதிவு இதோ:உத்தேசமும், எதிர்ப்பும்
நகராட்சியாக இருந்த திருப்பூர் 52 வார்டுகளுடன் இயங்கி வந்தது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட போது, 60 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டது. நல்லுார், 15 வேலம்பாளையம் பேரூராட்சிகள் மற்றும் எட்டு ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்தி 85 வார்டுகளுடன் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக மேலும் 12 ஊராட்சிகள் இணைக்க பரிந்துரைக்கப்பட்டது. கடந்தாண்டு இந்த ஊராட்சிகள் குறித்த முழு விவரங்களும் பெற்று பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது மட்டுமின்றி, திருமுருகன் பூண்டி நகராட்சியும் இணைக்கப்படலாம் என்ற தகவலும் பரவியது. இதுகுறித்த தகவல் பரவிய நிலையில், ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.வரி உயர்வும், சிரமமும்
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகளிலேயே அடிப்படை வசதிகள் ஏற்படுத்த முடியாமல் உள்ளது. ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைந்தால் மத்திய அரசின் நேரடி நிதி மற்றும் மானியங்கள் பெறுவது; தொழிலாளர் நம்பியுள்ள நுாறு நாள் வேலைத் திட்டம் போன்றவை பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறது. ஊராட்சிகள் அனைத்தும் பிரதானமாக விவசாயம் மற்றும் அதன் சார்பு தொழிலை நம்பியுள்ளன. மாநகராட்சியுடன் இணைத்தால் சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலியிட வரி, தொழில்வரி அனைத்தும் பல மடங்கு அதிகரிக்கும். வரியினங்கள் பல மடங்கு உயர்ந்து மேலும் சிரமம் மட்டுமே அதிகரிக்கும் என்ற கருத்து பரவலாக எழுந்தது.மாறிய நிலவரம்
இவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட மாவட்ட நிர்வாகம் இறுதியாக அரசுக்கு அனுப்பிய கருத்துருவில், அவிநாசி ஒன்றியம், கணியாம்பூண்டி மற்றும் பொங்கலுார் ஒன்றியம் நாச்சிபாளையம் ஆகிய இரண்டு ஊராட்சிகளை மட்டும் இணைக்கும் விதமாக இறுதியான பரிந்துரையை அரசுக்குச் சமர்ப்பித்தது. அதன்படி கடந்த மாதம் பிறப்பித்த அரசாணையில் திருப்பூர் மாநகராட்சியுடன் இவை மட்டுமே இணையும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இணைக்கப்படாமல் விடுபட்ட ஊராட்சிகள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி மாநகராட்சி நிர்வாகத்துக்கும் இது பெரும் நிம்மதியை அளித்துள்ளது. மக்களின் எதிர்ப்பு அதிருப்தியாக மாறாமல் அரசு பார்த்துக்கொண்டது.
கைவிடப்பட்ட முடிவு
மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைக்கப்படும்போது உள்ளாட்சி அமைப்பில் தலைவர், உப தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் பதவி காலியாகி விடும். ஒரு ஊராட்சி என்பது இரண்டு அல்லது மூன்று கவுன்சிலர்கள் என்ற அடிப்படையில் மாறி, அதிகாரமும் பறி போய்விடும் என்ற எண்ணம் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் ஏற்பட்டது. பல அடுக்கு அதிகாரம் என்ற நிலையில் பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும். திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக உத்தேசிக்கப்பட்ட ஊராட்சி நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியும், அதிருப்தியும் உருவானது. ஊராட்சி நிர்வாகங்களின் தொடர் வலியுறுத்தலால், இரண்டு ஊராட்சிகளைத் தவிர்த்து மாநகராட்சியுடன் பிற ஊராட்சிகள் இணைக்கும் முடிவை அரசு கைவிட்டது.
மாநகராட்சிக்கும் நிம்மதி: ஏன்?
திருப்பூர் மாநகராட்சியுடன் முன்னர் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு தற்போது தான் 15 ஆண்டுகளுக்குப் பின் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நான்காவது குடிநீர் திட்டம் கை கொடுப்பதால், குடிநீர் பிரச்னை இல்லை. இருப்பினும் ரோடுகள், தெரு விளக்குகள், சுகாதாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் இப்பகுதிகளுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.அங்கு இவற்றை நிறைவு செய்தால் போதும் என்ற நிலையில் தான் மாநகராட்சி நிர்வாகம் உள்ளது. மேலும் 12 ஊராட்சிகள் இணையும் போது, நிர்வாகத்தில் பெரும் சிக்கல் ஏற்படும். இணையும் பகுதியில் அடிப்படை வசதிகள் முழுமையாக மேற்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்படும். இதனால் நிர்வாகம் மீது அதிருப்தியும் ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது இரு ஊராட்சிகள் மட்டுமே இணைக்கப்படவுள்ளது என்பதால், மாநகராட்சி நிர்வாகத்துக்கும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.