உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கட்சிக்கொடியின் நிறமல்ல கருப்பு - பச்சை - சிவப்பு

கட்சிக்கொடியின் நிறமல்ல கருப்பு - பச்சை - சிவப்பு

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில் நடந்த அவசர கால முதலுதவி குறித்த கருத்தரங்கு நடந்தது. இதில் பங்கேற்ற தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ், ''பேரிடர் காலத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை 'கருப்பு - பச்சை - சிவப்பு' என்று மூன்றுவகையாகப் பிரித்து, மீட்புப்பணிகளை மேற்கொள்வோம். இதன் மூலம் இன்னுயிர் காப்போம்'' என்று கூறினார். அவர் மாணவர்களுடன் பகிர்ந்த, பலருக்கும் பயன்தரத்தக்க கருத்துகள் இதோ...!

முதலுதவிதான் முக்கியம்

மனித உயிர் விலை மதிக்க முடியாது. விபத்து, பேரிடர் காலங்களில், முடிந்தவரை ஒருவரின் உயிரை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். நிகழ்விடத்தில் இருந்து, தப்பித்தால் போதும் என எண்ணத்தை முதலில் கைவிட வேண்டும். ஆம்புலன்ஸ் வரும் முன் பாதிக்கப்பட்டோருக்கு ஏதேனும் முதலுதவி செய்ய முடியுமா என்பதை யோசிக்க வேண்டும்.'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது...' என்று சொன்னார் அவ்வையார். எனவே, ஒருவருக்கு பேரிடர், விபத்து மூலம் பெருங்காயம் ஏற்படாமல் இருக்க தேவையான முதலுதவியை நாம் உடனே மேற்கொள்வது அவரது வாழ்வையே காப்பாற்றும். நாம் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

முதலில் யாரை மீட்க வேண்டும்?

பேரிடர் மீட்பு பணிக்கு செல்லும் போதும், மூன்று வகையாக பாதிக்கப்பட்டவர்களை பிரிப்போம். கருப்பு, பச்சை, சிவப்பு என டேக் வழங்குவோம்.'கருப்பு டேக்' மூன்றாவதாக மீட்கப்பட வேண்டியவர்; அதாவது இறந்தவர்கள். இரண்டாவது 'பச்சை டேக்'; அதாவது, காயம் ஏற்பட்டுள்ளது; ரத்தம் உறைந்து, பேசும் நிலையில் உள்ளவர். முதலாவது மீட்கப்பட வேண்டியவர்கள் 'சிவப்பு டேக்'.ஏனெனில், இவர்களுக்கு அதிகளவில் ரத்தப்போக்கால் பேச்சும், மூச்சும் இருக்காது; உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பார்கள். இவர்களுக்கு தக்க உதவி செய்து, மீட்கும், மருத்துவ சிகிச்சை அளிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.

உயிர் மீட்பு சுவாசத்தின் மகத்துவம்

விபத்தின் போது அல்லது திடீரென ஒருவரின் இதயம், நுரையீரல், சுவாச செயல்பாடு திடீரென நின்று விட்டால், அவருக்கு தேவையான உடனடி முதலுதவியை அளிப்பது சி.பி.ஆர்., (உயிர் மீட்பு சுவாசம்). இதயத்துக்கு அருகே இரு உள்ளங்கைகளையும் வைத்து, அழுத்த வேண்டும்; இதய தசை விரிவாகி, காற்று உள்ளே செல்ல வாய்ப்பு உருவாகும். உடனடியாக வாய்வழியாக சுவாசம் கொடுக்க முயற்சிக்க வேண்டும். இதனால், நுரையீரல் செயல்பட துவங்கி, இயக்க நிலைக்கு அவர் வந்து விட முடியும். ஆனால், இது குறித்து முழுமையாக அறிந்து கொண்டு, தாமதமில்லாமல், செய்ய வேண்டும். கல்லுாரி மாணவர்கள் இதயம், நுரையீரல் செயல்பாட்டை மீண்டும் இயக்கத்துக்கு கொண்டு வருவது குறித்து, அறிந்து வைத்திருப்பது, மிக அவசியம்.

60 வகை விஷ பாம்புகள்

உலகில், 3 ஆயிரம் வகை பாம்புகள் உள்ளன. இவற்றில் 600 வகை பாம்புகள் விஷம் உள்ளவை. இந்தியாவில், 270 வகை பாம்புகள் உள்ளன. அவற்றில், கட்டு விரியன், கண்ணாடி விரியன், சாரை, நாகப்பாம்பு உட்பட, 60 வகைபாம்புகள் விஷம் கொண்டவை. பாம்பு கடித்த இடத்தை உடனடியாக தண்ணீரில் நனைத்து, சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். கழுவும் போது விஷம் வெளியே தள்ள வாய்ப்பு உருவாகும். பாம்பு கடித்த உடனே கண் பார்வை மங்கும், சிறுநீரக செயல்பாடு தடைபடும். முதலில், தளர்வாக அவ்விடத்தை கட்டி விட வேண்டும். இயன்றவரை மருத்துவமனையில் விரைவாக அனுமதிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி