உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நுகர்வோரே ராஜா; உரிமைகள் ஏராளம்

நுகர்வோரே ராஜா; உரிமைகள் ஏராளம்

திருப்பூர்: 'நுகர்வோர் என்பவர் ராஜாவை போன்றவர். சட்ட ரீதியாக, நுகர்வோருக்கு ஏராளமான உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன' என, புத்தாக்க பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் -2019 குறித்த புத்தாக்கப் பயிற்சி, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு முன்னிலை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் வரவேற்றார். மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் தீபா நுகர்வோரின் உரிமைகள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.

பில் கேட்டு வாங்குங்கள்

நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ரத்தினசாமி பேசியதாவது: ஒரு பொருள் அல்லது சேவையை வாங்கி பயன்படுத்தும் அனைவருமே நுகர்வோர்தான். அந்தவகையில், பிறந்த குழந்தை முதல் இறக்கும் வரை எல்லோரும் நுகர்வோராகவே இருக்கிறோம். நுகர்வோர் என்பவர் ராஜா போன்றவர். நுகர்வோருக்கு, பாதுகாப்புக்கான உரிமை, தகவல் அறியும் உரிமை, கருத்து கேட்கும் உரிமை, குறை தீர்க்கும் உரிமை, நுகர்வோர் கல்வி உரிமை என எல்லா வகை உரிமையும் உள்ளன. கடைகளில் பொருட்கள் வாங்கும்போது, தயாரிப்பு, காலாவதி தேதி, அதிகபட்ச விலை விவரங்களை கட்டாயம் பார்க்கவேண்டும்; வாங்கும் பொருள் அல்லது சேவைக்கு உரிய பில் கேட்டுப்பெறவேண்டும்.

கோர்ட்டை அணுகலாம்

வாங்குகின்ற பொருளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், அந்த பொருளை தயாரித்த உற்பத்தியாளர் பொறுப்பாகிறார். அவர், நுகர்வோருக்கு, அந்த பொருளை சரி செய்து, அல்லது மாற்றி வழங்கவேண்டும். வாங்கிய பொருளில் குறைபாடுகள் இருந்து, உற்பத்தியாளர் அதை சரி செய்துதர மறுத்தால், அந்த சூழலில் நுகர்வோர், நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். நுகர்வோர் சுயமாகவோ, வக்கீல் அல்லது சரியான வழியில் நுகர்வோர் அமைப்புகள் வாயிலாகவோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். நுகர்வோர், ஒரு பொருள் அல்லது சேவையை பணம் கொடுத்து வாங்கியிருந்தால் மட்டுமே வழக்கு தொடரமுடியும். அந்த பொருளை வாங்கியதற்கான ரசீது; வேறு சேவைகள் எனில், ஒப்பந்தம் சார்ந்த ஆவணங்களை வைத்திருக்கவேண்டும். வாங்கும் பொருள் அல்லது சேவைக்கு ரசீது தர மறுத்தாலும், நுகர்வோர் கேட்டு பெறமுடியும்; இல்லாவிடில், உரிய சட்ட வழிகளை கையாளலாம். நுகர்வோர் தொடரும் புகார் அடிப்படையில், எதிர் மனுதாரான, குறிப்பிட்ட பொருளை உற்பத்தி செய்த அல்லது சேவை வழங்குனரை அழைத்து, விசாரணை நடத்தப்படும். நுகர்வோர் தரப்பில் கூறப்படுவதில் உள்ள உண்மைத்தன்மை ஆராய்ந்து உறுதி செய்யப்பட்டால், அதற்கு உரிய இழப்பீடு பெற்றுக்கொடுக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார். திருப்பூர் பகுதி அரசு, தனியார் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். --- மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், 'நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் -2019' குறித்த புத்தாக்கப் பயிற்சி மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. நோய்களை மறைத்து காப்பீடு பெறக்கூடாது மருத்துவ காப்பீடு செய்வோர், சர்க்கரை நோய் உள்ளிட்ட ஏற்கனவே வேறு நோய்கள் இருப்பின், அவ்விவரங்களை முன்னரே காப்பீடு நிறுவனத்திடம் தெரியப்படுத்திவிடவேண்டும். முந்தைய நோய்கள் குறித்து மறைத்தால், எதிர்காலத்தில் காப்பீடு தொகை பெறவேண்டிய சூழல் ஏற்படும்போது, காப்பீடு நிறுவனத்துக்கு சாதகமானதாகிவிடும்; சுலபமாக காப்பீடு தொகையை மறுத்துவிடுவர். - ரத்தினசாமி, உறுப்பினர், நுகர்வோர் குறைதீர் ஆணையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை