உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்

பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்

அவிநாசி; அவிநாசியில் ஆக்கிரமிப்புகள் மற்றும் சாலையோர ஆக்கிரமிப்பு கடை களை முறையாக அகற்றாததால் வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவிநாசி நகராட்சி பகுதியில், சேவூர் ரோட்டில் சூளை பகுதியில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் வரை 300-க்கும் மேற்பட்ட கடைகள் புதிதாக முளைத்துள்ளது. இதில் நிரந்தரமாக கடைகள் வைத்து வாடகை, அரசுக்கு பல்வேறு வரிகள், மின்சார கட்டணம், ஊழியர்களுக்கு சம்பளம் ஆகியவை என பல வகையில் வணிகர்களும், வியாபாரிகளும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சாலையோர கடைகளால் பெரும் பொருளாதார நஷ்டத்தை சந்திப்பதாகவும், வாழ்வாதாரம் கேள்விக்குறியாக நிற்பதாக கூறி, சாலையோர கடைகளை முறைப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற பலகட்ட போராட்டத்துக்கு பின், கடந்த மாதம், 25ம் தேதி அவிநாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. அதில், ஒன்றாக வியாபாரிகள் தங்கள் கடை முன் நிழலுக்காக அமைக்கப்பட்டிருந்த ஷெட் மற்றும் பெயர் பலகைகள் முழுமையாக அகற்றப்பட்டன. இதேபோல, சாலையோர கடைகளும் அகற்றப்பட்டன. அடுத்த மூன்றே நாளில், முன்பு இருந்ததை விட அதிகளவில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் பெருகியது. இதுதவிர, தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயத்தில், நெடுஞ்சாலைத்துறையினரின் 'கெடுபிடியால்' வர்த்தகர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். அதுவும் தவிர, ஆக்கிரமிப்பு அகற்றுகிறோம் என்ற போர்வையில், அகற்றிய இரு நாளிலேயே மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சரியான விளக்கம் இல்லை. அதிகாரிகளின் இந்த செயலை பார்க்கையில், 'இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடோனிலேயே இருக்கலாமே...' என்ற சினிமா வசனம் தான் நினைவுக்கு வருகிறது என்று பொதுமக்கள் கலாய்க்கின்றனர். தொடர்ந்து நடக்கிறது...நெடுஞ்சாலைத் துறை அவிநாசி உதவி கோட்டப் பொறியாளர் செங்குட்டுவேலிடம் கேட்டதற்கு, ''ஆக்கிரமிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. பழைய பஸ் ஸ்டாண்ட் துவங்கி, புதிய பஸ் ஸ்டாண்ட் வரை ஞாயிற்றுக்கிழமை போடப்படும் கடைகளை நெடுஞ்சாலைத்துறையால் அகற்ற முடியாது,'' என்று மழுப்பலாக பதில் கூறி இணைப்பை துண்டித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ