கடைபிடிக்கப்படாத விதிமுறைகள் கடிந்துகொண்ட விசாரணைக்குழு
திருப்பூர்; இலவச ஸ்கூட்டர் வழங்கியதில் முறைகேடு தொடர்பாக, சிறப்பு குழுவினர் திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் இரண்டு நாட்கள் விசாரணையை முடித்துள்ளனர்.திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் வாயிலாக, இணைப்பு சக்கரம் பொருத்திய இலவச ஸ்கூட்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை செய்வதற்காக, துணை கமிஷனர் ரவீந்திரநாத் சிங் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய சிறப்பு குழுவினர், நேற்றுமுன்தினம் திருப்பூர் வந்தனர்.குழுவினர், நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரண்டு நாட்கள், கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்கூட்டர் பெற்ற மாற்றுத்திறனாளிகள் விவரம், ஆன்லைன் பதிவு மூப்பு அடிப்படையில்தான் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளதா; தகுதியற்ற நபர்கள் யாரேனும் ஸ்கூட்டர் பெற்றுள்ளனரா என, சிறப்பு குழுவினர் விரிவான ஆய்வு நடத்தியுள்ளனர். 'தினமலர்' நாளிதழ் மூலம்அம்பலமான உண்மைகள்மாற்றுத்திறனாளி வெங்கடேஸ்வரன் பெயரில் பதிவு செய்த ஸ்கூட்டர், பொங்கலுாரை சேர்ந்த சேகர் என்கிற மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்டிருந்தது. நம் நாளிதழில் வெளியான செய்திக்குப்பின், அந்த ஸ்கூட்டர் மீட்கப்பட்டு, வெங்கடேஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், மார்ச் 25 ல் வேறு ஸ்கூட்டர் பதிவு செய்யப்பட்டு, சேகருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், திருப்பூரை சேர்ந்த கனகராஜின் ஸ்கூட்டர், உடுமலையை சேர்ந்த மற்றொரு மாற்றுத்திறனாளி கனகராஜூக்கு வழங்கப்பட்டிருந்தது. நம் நாளிதழில் செய்தி வெளியானபின்னரே, உடுமலையிலிருந்து மீட்கப்பட்ட ஸ்கூட்டர், திருப்பூரை சேர்ந்த கனகராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. உடுமலை கனகராஜின் ஸ்கூட்டர் ஷோரூமில் இருப்பது தெரியவந்தது.தகுதியற்ற மாற்றுத்திறனாளி ரேஷன் ஊழியர், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கியது, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒருவர் பெயரில் பதிவு செய்த ஸ்கூட்டரை, வேறு மாற்றுத்திறனாளிக்கு வழங்கியது, ஸ்கூட்டர் வழங்குவதில் ஆன்லைன் விண்ணப்ப பதிவு மூப்பு சரிவர பின்பற்றப்படாதது குறித்து, சிறப்பு குழுவினர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினரை கடிந்துகொண்டனர்.இருப்பிடத்துக்கேசென்று விசாரணைஅதேபோல், பத்து மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்துக்கு நேரில் சென்ற குழுவினர், உண்மையான பயனாளிக்குதான் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். குறிப்பாக, பொங்கலுாரை சேர்ந்த ஒருவரது வீட்டுக்கு சென்று, அவரால் ஸ்கூட்டர் ஓட்ட முடியுமா என்பதை ஆய்வு செய்து, உறுதிப்படுத்தினர்.---மாற்றுதிறனாளிகள் மருத்துவ பரிசோதனை முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குனர் ரவீந்திரநாத் சிங் பார்வையிட்டார்.துணை இயக்குனர் ஆய்வு செய்ததால், மாற்றுத்திறனாளிகள் மருத்துவ பரிசோதனை முகாமுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
முறையாக நடந்த மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம்
----------------------------மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. முகாமில் எவ்வித ஒழுங்குபடுத்துதலும் மேற்கொள்வதில்லை. கும்பலோடு கும்பலாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்களை நிற்கவைத்து, ஆவணங்களை பெற்று, விண்ணப்பங்கள் பூர்த்தி செய்வர்.விசாரணைக்காக வந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குனர், நேற்று நடந்த மருத்துவ பரிசோதனை முகாமை பார்வையிட்டார். சுதாரித்துக்கொண்ட மாவட்ட அதிகாரிகள், என்றும் இல்லாத வகையில் நேற்று, ஒழுங்குபடுத்துதலோடு முகாமை நடத்தினர்.மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, வரிசையில் நிறுத்தி, விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தனர். விண்ணப்பம் பூர்த்தி செய்தபின், ஒவ்வொருவராக கூட்ட அரங்கினுள் அனுப்பப்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் தாகம் தீர்க்க தண்ணீர் கேன் வைக்கப்பட்டது.வழக்கம்போல் காலை, 9:00 மணி முதலே, கலெக்டர் அலுவலகத்துக்கு மாற்றுத்திறனாளிகள் வர துவங்கிவிட்டனர். ஆனால், மருத்துவர்கள் வருகையில் காலதாமதம் ஏற்பட்டது; காலை, 11:00 மணி வரை, ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே வந்திருந்தார். இதனால் டென்ஷனான சிறப்புக்குழுவினர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு 'டோஸ்' விட்டனர். 'டாக்டர்களுக்கு ஓரிரு நாட்கள் முன்னரே தகவல் தெரிவிக்கவேண்டும்; எந்தெந்த டாக்டர்கள் முகாமுக்கு வருகின்றனர் என உறுதி செய்துகொள்ளவேண்டும். சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசி, டாக்டர்கள் குறித்த நேரத்துக்குள் முகாமுக்கு வருவதை உறுதிப்படுத்தவேண்டும்' என அறிவுறுத்தினர்.அதிகாரிகள் வந்தபோது நடந்துள்ள இந்த நல்ல மாற்றம் எப்போதும் தொடர வேண்டும்.---
'தகுதியானவர் தேர்வு: கட்டமைப்புக்கு பரிந்துரை'
திருப்பூரில், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கியது தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. எவ்வித விடுபடுதலும் இன்றி, அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளை நேரில் வரவழைத்தும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனரிடம் அளிக்கப்படும். தவறுகள் கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.ரேஷன், அங்கன்வாடி ஊழியர்கள், தவறான தகவல் அளித்து ஸ்கூட்டர் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடைபெறாதவகையில், ஸ்கூட்டருக்கு தகுதியானவர்களை மட்டும் தேர்வு செய்யும்வகையிலான கட்டமைப்புகளை ஏற்படுத்த, பரிந்துரைக்கப்படும்.- விசாரணை மேற்கொண்ட சிறப்புக்குழு அதிகாரிகள்.