மேலும் செய்திகள்
ஆடிப்பெருக்கு பண்டிகை சிறப்பு பஸ்கள் இயக்கம்
13-Jul-2025
உடுமலை; ஆன்மிக வழிபாடுகளை கொண்ட ஆடிமாதம் நேற்று பிறந்துள்ள நிலையில், இன்று ஆடி வெள்ளி என்பதால், கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.இம்மாதம் முழுவதும் களைகட்டுகிறது.தமிழ் மாதங்களில் உள்ள 12 மாதங்களில், ஒவ்வொரு மாதமும், பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. தட்சிணாயணத்தின் துவக்கமாகிய ஆடி மாதம், பல்வேறு விழாக்களை கொண்டாடும் புனித மாதம் என்று, ஹிந்து மக்கள் கொண்டாடுகின்றனர்.இதில், ஆடிவெள்ளிக்கிழமை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், நாக-கருட பஞ்சமி, ஆடிப்பெருக்கு, ஆடித்தபசு, ஆடிமாத உபகர்மா, வளையல் அலங்காரபூஜை, சுமங்கலிகளின் விளக்கு பூஜை, ஆடி மாத செவ்வாய் வழிபாடு, கிராமதேவைகளுக்கு பத்து நாட்கள் உற்சவம், ராகிக்கூழ், ஆடிப்பட்டம் தேடி விதைப்பது, தட்சிணாயண புனித காலம் துவஙக்கம், குலதெய்வ வழிபாடு, கஜேந்திர மோட்சம் நடந்த மாதம், ஆண்டாள் அவதாரம் என, பல்வேறு சிறப்புகளை பெற்றது ஆடிமாதம்.தமிழ்மாதங்களில், அதிகப்படியான வழிபாட்டு விழாக்களை கொண்ட ஆடிமாதம் நேற்று பிறந்துள்ள நிலையில், ஆடிமாதம் முதல் வெள்ளியான இன்று, அம்மன் கோவில்களில் அலங்காரபூஜையும், கூட்டு வழிபாடும் நடக்கிறது.மேலும், கோவில்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.உடுமலையிலுள் அம்மன் கோவில்களில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகள் நடக்கும் நிலையில், மேலும் சிறப்பு அம்சமாக திருப்பூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசை வழிபாடும் பாரம்பரியமாக சிறப்பானதாக காணப்படுகிறது.ஆடி பட்ட சாகுபடியை துவக்கும் விவசாயிகள், மாட்டு வண்டிகளில் வந்து, திருமூர்த்திமலையில் எழுந்தருளியுள்ள மும்மூர்த்திகளை வழிபட்டு பணிகளை துவக்குவதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர்.அதே போல், திருமூர்த்திமலையில் தோணியாற்றில், முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தும் வழக்கமும் தொடர்ந்து வருகிறது.மேலும், வேளாண் வளம் செழிக்கவும், பயிர் சாகுபடிக்கு ஆதாரமாக உள்ள நீர் நிலைகளில், முளைப்பாலிகை விட்டு வழிபாடு நடத்தும் ஆடிப்பெருக்கு தினமும், அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு, ஆடி மாதம் பிறந்துள்ளதால், ஆன்மிக நிகழ்ச்சிகள் களைகட்டியுள்ளது.
13-Jul-2025