உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெட் படம் கடந்த ஆண்டை விட குறைந்த தென் மேற்கு பருவமழை

நெட் படம் கடந்த ஆண்டை விட குறைந்த தென் மேற்கு பருவமழை

பல்லடம்: பல்லடம் வட்டாரத்தில், தென்மேற்கு சராசரி மழையளவு கடந்த ஆண்டை காட்டிலும் குறைந்துள்ளது, விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் வட்டாரம் வறட்சி மிகுந்த பகுதியாக கருதப்படுகிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை மூலம், ஆண்டுக்கு, சராசரியாக, 500 மி.மீ., மழை பதிவாகிறது. காலநிலை மாற்றம் காரணமாக, மழையின் அளவுகள் சமீப காலமாக வேறுபடுகிறது. கோடை காலத்தில் திடீரென மழை பெய்வதும், பருவ மழை காலத்தில் கடுமையான வெப்பம் தாக்குவதுமாக காலநிலை மாறுபட்டுள்ளது. பருவமழை ஏமாற்றிய போதும், பி.ஏ.பி., பாசன நீரை பயன்படுத்திய விவசாயிகள் ஓரளவு தப்பித்துக் கொள்கின்றனர். இருப்பினும், பொதுமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. தண்ணீர் பிரச்னையில் இருந்து தப்பித்துக் கொள்ளவே, காய்கறி சாகுபடியில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான விவசாயிகள், தென்னை விவசாயத்திற்கு மாறினர். ஆனால், எதிர்பார்த்த அளவு பருவ மழை கிடைக்காமல், பெரும்பாலான விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். பி.ஏ.பி., பாசன பரப்புகளை தவிர்த்து, இதர பகுதி விவசாயிகள் என்ன செய்வது என்றே தெரியாத சூழலில் உள்ளனர். ஆண்டுதோறும், ஜூன் முதல் செப்., வரை, தென்மேற்கு பருவ மழை காலமாகும். இக்காலகட்டத்தில், பல்லடம் வட்டாரத்தில் சராசரியாக, 166 மி.மீ., மழை பதிவாகிறது. கடந்த ஆண்டு, 101 மி.மீ., மழை மட்டுமே கிடைத்தது. நடப்பு ஆண்டு, கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாக, 73 மி.மீ., மழை மட்டுமே கிடைத்துள்ளது. குறிப்பாக, தென்மேற்கு பருவமழை நிறைவடையும் செப்., மாதத்தில் மட்டும், சராசரியாக, 55 மி.மீ., மழை பதிவாகும். ஆனால், இம்முறை, செப்., மாதத்தின் மழையளவு பூஜ்ஜியமாக உள்ளது. கடந்த மே மாதம், 113 மி.மீ., கோடை மழை கிடைத்ததுதான், கடந்த ஆறு மாதங்களில் கிடைத்த அதிகபட்ச மழையாக உள்ளது. நடப்பு ஆண்டு ஜன., முதல் ஏப்., வரை, 28 மி.மீ., மழை மட்டுமே பதிவான நிலையில், கோடை மழைதான் விவசாயிகளுக்கு பெரிதும் கை கொடுத்தது. இவ்வாறு, தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு கிடைக்காதது, விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. வடகிழக்கு பருவமழையாவது கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புடன், பல்லடம் வட்டார விவசாயிகள் காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை