உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காசு கறந்து பூரிப்புடன் திளைத்த அதிகாரி... கறி விருந்து களிப்புடன் திகட்டிய ஜமாபந்தி

காசு கறந்து பூரிப்புடன் திளைத்த அதிகாரி... கறி விருந்து களிப்புடன் திகட்டிய ஜமாபந்தி

வெயில் 'சுளீர்' என கொளுத்தியது.''அக்கா... மாவட்டத்துல, மாற்றுத்திறனாளிகள் புழுக்கத்தில தவிக்கிறாங்க... இணைப்புச்சக்கர ஸ்கூட்டர் வழங்குறதுல முறைகேடுகள் தொடர்ந்து அம்பலமாகிட்டே வருது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனர், செயலர் கவனத்துக்குக் கொண்டு சென்றும் கண்டுகொள்ளாததால முறைகேடு செய்றவங்க தைரியமாயிட்டாங்க...''மித்ரா, சித்ராவிடம் பேச்சைத் தொடர்ந்தாள்.''இதுதொடர்பா அளிக்கப்பட்ட புகாருக்கு, 'சிலர் உண்மையை மறைச்சு தவறான ஆவணங்களைச் சமர்ப்பிச்சு, தவறுதலா ஸ்கூட்டரை வாங்கிடுறாங்க'ன்னு நல்ல பிள்ளை மாதிரி, அதிகாரிகள் 'சேம் சைடு' கோல் அடிச்சிருக்காங்க...''போன வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை நடந்தப்ப, உடுமலையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருத்தருக்காக, அதிகாரியும், அலுவலரும், உடல் பாதிப்பு சதவீதத்தை அதிகரிச்சு சர்டிபிகேட் கொடுக்கும்படி டாக்டர்களை நிர்பந்திச்சாங்களாம்.''இதைத் தெரிஞ்சிக்கிட்ட டாக்டர்கள் நேரடியா அவரை வரச்சொன்னாங்களாம். கலெக்டர் தலையிட்டாதான் தில்லாலங்கடி வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்''''சரி மித்து... உங்கச் சொந்தக்காரங்க வசந்தராமனும், சுப்பனும் வர்றதா சொன்னாங்களே...''''அவங்க சொன்ன டைமுக்கு எப்ப வந்திருக்காங்க அக்கா...''ஆதங்கப்பட்டாள் மித்ரா.

பிரதமர் பேனர் அகற்றம்

''மித்து... வேளாண் நுட்பங்கள், அரசு திட்டங்கள் தொடர்பா வேளாண் வளர்ச்சி விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய வேளாண் அமைச்சகம் நடத்திட்டு வருது. பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலையம் மூலம், மாவட்டத்துல, விழிப்புணர்வு பிரசாரம் நடக்குது.''இதுதொடர்பான பேனரை, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஒட்டியிருந்தாங்க...''விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்திட்டிருந்தப்பவே, கலெக்டர், வேளாண் அதிகாரிகள் முன்னிலைலேயே, பிரதமர் மோடி படத்தோட இருந்த விழிப்புணர்வு பிரசார பேனரை, அலுவலர்கள் சிலர் அவசர அவசரமாக வந்து, அப்புறப்படுத்திட்டாங்க...''இதை வீடியோவா எடுத்த விவசாயிகள், அதை வைரலாக்கிட்டாங்க''சித்ரா அம்பலப்படுத்தினாள்.''சித்ராக்கா... திருப்பூர் வடக்கு தாலுகா, பொம்ம நாயக்கன்பாளையத்தில இருக்கிற ரேஷன் கடைல சப்ளை செய்யப்பட்ட அஸ்கா சர்க்கரை, பவுடர் மாதிரி இருந்துச்சுன்னு புகார் கெளம்புச்சு... உடனே, ரேஷன் ஊழியரை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க.''கேவலமா பொருளைக் கொடுத்துட்டு, ஊழியரைப் பலிகடா ஆக்குவீங்களான்னு, ரேஷன் பணியாளர் சங்கம் கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சவுடனே, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செஞ்சிருக்காங்க...''''மித்து... மாவட்டம் முழுதும், ஜமாபந்தி நடந்துச்சு...''செலவுகளை சமாளிக்க, ஒவ்வொரு கிராமத்துக்கும், 2000 ரூபாய்ன்னு, 'நாசி-அவி' தாலுகாவுல, வசூல் பண்ணுனாங்களாம். தடபுடல் கறி விருந்துதானாம். ஜமாபந்தில ஜமாய்ச்சுட்டாங்க...''இந்தப் பணத்தை வி.ஏ.ஓ., அவங்க கையில இருந்தா போட்ருப்பாங்க... எல்லாம் நம்ம தலையிலதான் விடியுதுன்னு பொதுமக்கள் தலையில அடிச்சிட்டாங்களாம்''

தி.மு.க.,வில் அதிருப்தி

''சித்ராக்கா... போன வாரம், தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்துச்சு. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 'திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க.,ல தற்போது 80 முதல் 90 பூத்கள் கொண்ட பகுதி அமைப்பு இருக்கு... இதை தலா 30 பூத்துக்கு ஒரு பகுதி செயலாளர் நியமிக்கலாம்'ன்னு ஆலோசனை சொன்னாராம்.''வடக்கு மாநகர்ல நான்கு பகுதி செயலாளர் இருக்காங்க... அறிவிப்பால அதிருப்தி அடைஞ்ச இவங்க, ரெண்டு நாள் கழிச்சு நடந்த மாநகர நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தை புறக்கணிச்சுட்டாங்களாம்.''பதறிப்போன மாநகர செயலாளர் அவங்களை சமாதானப்படுத்தி அழைச்சுட்டு வந்தாராம். மாவட்ட செயலாளரைச் சந்திச்சு இதுகுறித்து பேச வச்சாராம்''''மித்து... கடந்த வாரம் தாராபுரத்துல வளர்ச்சிப் பணிகள் துவக்கவிழா நடந்துச்சு...''நாலு திட்டங்களுக்குத் தனித்தனியா பேனர் வச்சிருந்தாங்களாம்.''பேனர்ல முதல்வர், துணை முதல்வர் படம் இல்லையாம்.''இந்தத் தகவலை சொன்னதும், அவசர அவசரமா முதல்வர், துணை முதல்வர் படத்தோட பேனரை ரெடி பண்ணிக் கொண்டு வந்தாங்களாம்.''அப்புறம் தான் அமைச்சர் உள்ளிட்டவங்க நிம்மதியானாங்களாம்''

கசிந்த பெயர்கள்

''சித்ராக்கா...கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் பார்க்கிங் வளாகத்துக்கு ரெண்டு முறை ஏலம் நடத்தியும் முடிவாகாம மூனாவது தடவையா ஏலம் நடக்கப்போகுது.'ஏலத்தில் பங்கேற்க போறவங்களை, ஆளும்கட்சிக்காரங்க, அதிகாரிகள் தொடர்புகொண்டு, பங்கேற்கக்கூடாதுன்னு சொன்னாங்களாம். சிலர் ஏன் வம்புன்னு ஒதுங்கீட்டாங்களாம். எப்படி பேர், விவரம் எல்லாம் வெளியே கசிஞ்சுச்சுன்னு ஏலத்துல கலந்துக்குறவங்க கொதிக்கிறாங்க.''கட்சிக்காரங்களுக்கு செய்யணும்ங்கற 'அக்கறை'ல மாநகராட்சி 'வி.ஐ.பி.,' இருக்றதுதான் இதுக்குக் காரணமா இருக்கலாம்ன்னு சொல்றாங்க...''''மித்து... ஊராட்சித் தலைவர் தேர்தல் எப்ப நடக்கும்ன்னு தெரியாது. ஆனா, கோவில்-கண்டியன் ஊராட்சில ஊராட்சி தலைவராகணும்கற கனவுல, தி.மு.க., பிரமுகர் ஒருத்தரு, இப்பவே கோவில் கோவிலா போய் நன்கொடை தர்றாராம். வலிய போய் அன்னதானம் பண்றாராம். அந்த 'நாட்ராயன்'தான் அவரைக் காப்பாத்தணும்''''சித்ராக்கா... திருப்பூர் மாநகர்ல குப்பை கொட்டுற இடங்கள்ல கடுமையா எதிர்ப்பு கெளம்புது... மாநகராட்சி கூட்டத்துல, குப்பை விவகாரத்துல, சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாக மேயர் 'பகீர்'ன்னு போட்டு உடைச்சுட்டாரு...''விவசாய சங்கத்தினரோ, மேயரோட பேச்சுக்கு கண்டனம் தெரிவிச்சிருக்காங்க...''''தோழர் கட்சி எம்.பி., முதல்வருக்கு குப்பை விவகாரம் தொடர்பா கடிதம் எழுதியிருக்காரு... ஆனா, அதே கட்சியை சேர்ந்த கவுன்சிலருங்க, மாமன்ற கூட்டத்தில் மேயருக்கு ஆதரவா குப்பை விவகாரத்துல இருக்காங்க... இந்த முரணால மக்கள் குழம்பியிருக்காங்க''

'கட்டிங்' தாராளம்

''மித்து... மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவுல பணப்புழக்கம் தாராளமா இருக்குது. தவறுகள் வெளியே தெரியாம இருக்குறதுக்காக, 'நான்காம் துாண்' பெயர்ல வலம் வர்ற சிலருக்கு, மாதந்தோறும் 'கட்டிங்' கொடுக்கிறாங்களாம். பேருக்கு சில வழக்குகள் பதியப்படுது. மீதியெல்லாம் 'டீலிங்'ல முடியுது...''காங்கயம் சப்-டிவிஷன் கிரைம் பிரிவில வேலைபார்க்குற போலீசார், கஞ்சா சப்ளை செய்ற ஆசாமியோட நெருக்கமா இருக்கறதால, கஞ்சா புழக்கம் கொடிகட்டிப் பறக்குதாம். கூண்டோட இவங்களை எஸ்.பி., துாக்கியடிச்சாதான், கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்னு சக போலீஸ்காரங்களே சொல்றாங்க...''''சித்ராக்கா... திருமுருகன்பூண்டி நகராட்சில கான்ட்ராக்ட் நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் துாய்மைப்பணியாளர்கள் பி.எப்., - இ.எஸ்.ஐ.,க்கான தொகையை முறையா செலுத்தப்படறதில்லைன்னு புகார் வாசிக்கிறாங்க... மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளை கவனிக்க வேண்டியிருக்குன்னு கான்ட்ராக்ட் நிறுவனத்தினர் சொல்றாங்களாம்.''துாய்மைப்பணியில் நிலவும் முறைகேடு தொடர்பாக மா.கம்யூ., கட்சிக்காரங்க மக்கள் இயக்கம் நடத்த திட்டமிட்டிருக்காங்க...''போராட்டம், எதிர்ப்பு கிளம்ப, கிளம்ப 'கட்டிங்' சேர்த்து வழங்கணும்ன்னு கமிஷன் மழைல நனையறவங்க விடாப்பிடியா இருக்காங்களாம். இது எப்படி இருக்கு?''மித்ரா கேள்வி எழுப்பினாள்.

புரோக்கர்மயம்

''மித்து... அவிநாசி வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில ஆய்வாளரைச் சுத்தி புரோக்கர்கள் கூட்டம்தான் இருக்குதாம். அலுவலகத்துக்கு அருகிலே இருக்கிற சில கடைக்காரங்க கட்டுப்பாட்டுலதான் 'காரியம்' எல்லாம் நடக்குதாம்''''சித்ராக்கா... அவிநாசில நடந்த 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றிப்பேரணியை பா.ஜ., நடத்துச்சு.... இதில அ.தி.மு.க., காரங்க, வணிகர்கள் எல்லாம் கலந்துட்டாங்க...''அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தனபால் ரெண்டு வருஷமா எந்த நிகழ்ச்சிலயும் தலைகாட்றதில்ல. அவரோட பையன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் சில நிகழ்ச்சில தலைகாட்டிட்டுப் போறாரு. இந்த நிகழ்ச்சிக்கு வருவார்ன்னு நெனச்சாங்களாம். ஆனா எட்டிப்பார்க்கலையாம்''''மித்து... மாவட்டத்துல இருந்த கல்வி அதிகாரி 'ரிடையர்டு' ஆகுறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி கல்லா கட்டுறதில தீவிரமா இருந்தாராம். கல்வி அலுவலக பணிகளில் உள்ள அலுவலர், பணியாளர், அதிகாரிகள் பணியிட மாறுதலுக்கு ரேட் 'பிக்ஸ்' பண்ணி வாங்கீட்டாராம். இப்படி 'வாங்குறாரே' என, பொறுமை இழந்தவர்கள், கலெக்டர்ட்ட பேசிக்கலாம்னு புறப்பட்டாங்களாம். ஆனா, அவரு நேரடியா டீல் பேசாம, சூப்பிரண்டு மூலமா பேசினாராம். எப்படியோ பெரிசா கல்லா கட்டினதுல பூரிப்பாயிட்டாராம் அதிகாரி''''சித்ராக்கா... பக்கத்துவீட்டு பசங்க உதயகுமாரும், செல்வகுமாரும் நொங்கு வாங்கிட்டு வந்து தர்றேன்னு சொன்னாங்க... இன்னும் ஆளே காணல'''ஜில்'லென மோருடன் வந்தாள் மித்ரா. இருவரும் பருகத் துவங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !