எலாஸ்டிக் விலை 10 சதவீதம் உயர்கிறது!
திருப்பூர்: திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்க (டெமேட்டா) ஆலோசனை கூட்டம், விஸ்வாஸ் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். செயலாளர் சவுந்தரராஜன் வரவேற்றார். மின் கட்டண உயர்வு, குறு, சிறு, நடுத்தர நிலையில் உள்ள எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களை மிக கடுமையாக பாதிக்கச் செய்கிறது. கவரின், வார்ப்பிங், பேக்கிங் உள்ளிட்ட இயந்திரங்களை இயங்குவதற்கு அதிக மின்சாரம் தேவைப்படுகிறது.மின் கட்டண உயர்வால், எலாஸ்டிக் உற்பத்தி செலவினம் உயர்ந்துள்ளது. தமிழக முதல்வரும், தொழில் துறை அமைச்சரும் பரிசீலனை செய்து, மின்கட்டணத்தை குறைக்க வேண்டும். மற்ற ஜாப்ஒர்க் துறையினர் போல் அல்லாமல், எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள், மூலப்பொருட்களான நுால் மற்றும் ரப்பரை சுயமாக கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது.பெட்ரோலிய பொருட்கள் விலையை பொருத்தே, எலாஸ்டிக் மூலப்பொருட்கள் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களில் நுால் விலை கிலோவுக்கு 5 முதல் 8 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தட்பவெப்ப நிலை மாறுபாடுகளால் ரப்பர் விலையும் எகிறிவிட்டது. கடந்த மாதம் 140 ரூபாயாக இருந்த ஒரு கிலோ லேட்டெக்ஸ் ரப்பர் விலை தற்போது, 201 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. இதனால், ரப்பர் விலை, 280 ரூபாய் வரை சென்று, மேலும் உயரும் நிலையில் உள்ளது.எனவே விலையை கட்டுக்குள் கொண்டுவர, எலாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், வெளிநாடுகளிலிருந்து ரப்பர் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நுால், ரப்பர் விலை, மின் கட்டண உயர்வு காரணமாக, வரும் அக்., 1ம் தேதி முதல் எலாஸ்டிக் விலை, 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது.இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வரும். சைமா, ஏற்றுமதியாளர்கள் சங்கம், டீமா உள்ளிட்ட பின்னலாடை உற்பத்தியாளர் சங்கங்கள், எலாஸ்டிக் விலை உயர்வை ஏற்றுக் கொள்ளவேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், தீ விபத்தை தடுக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் காப்பீடு குறித்து தனியார் இன்சூரன்ஸ் நிறுன துணை தலைவர் அருண் பீட்டர் விளக்கம் அளித்தார். எலாஸ்டிக் சங்க பொருளாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.---எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில், அதன் தலைவர் கோவிந்தசாமி பேசினார். அருகில், சங்க நிர்வாகிகள். கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்.