சின்ன வெங்காயம் விலை உயர்ந்தது
பொங்கலுார், ;வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் புரட்டாசி வரை அறுவடை செய்யப்பட்டு வந்தது. அறுவடையின்போது போதிய விலை கிடைக்கவில்லை. பல விவசாயிகள் பட்டறை அமைத்து இருப்பு வைத்திருந்தனர். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அறுவடை முடிந்து விடும் என்பதால் விலை உயர்வது வழக்கம். இதை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர். பெரிய வெங்காயம் கிலோ, 80 ரூபாய் வரை விற்பனையான போதிலும் சின்ன வெங்காய விலை உயரவில்லை. இருப்பு வைத்த வெங்காயத்தில் எடை குறைவு, அழுகல் போன்ற பிரச்னைகளை விவசாயிகள் எதிர்கொண்டனர்.இனியும் வைத்திருந்தால் முதலுக்கே மோசமாகிவிடும் என்பதால் விவசாயிகள் இருப்பு வெங்காயத்தை விற்பனை செய்வதில் மும்முரமாக ஈடுபட்டனர். அதிகபட்சமாக கிலோ, 45 ரூபாய்க்கே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது இருப்பு வெங்காயம் பெரும் அளவில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் வெளியூரிலிருந்து புதிய காய்கள் வர துவங்கியுள்ளது. இதனால், முதல் தர சின்ன வெங்காயம் கொள்முதல் விலை கிலோ, 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. விலை உயர்ந்த போதிலும் தங்களிடம் இருப்பு இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.