உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பிரதமரின் எண்ணம் நிறைவேற வேண்டும்; விருது பெற்ற இயற்கை விவசாயி விருப்பம்

 பிரதமரின் எண்ணம் நிறைவேற வேண்டும்; விருது பெற்ற இயற்கை விவசாயி விருப்பம்

பல்லடம்: ''இந்தியா, இயற்கை விவசாய நாடாக மாற வேண்டும் என்ற பிரதமரின் எண்ணம் நிறைவேற வேண்டும்'' என, விருது பெற்ற இயற்கை விவசாயி பழனிசாமி கூறினார். கடந்த, 19ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்ற, தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு கோவையில் நடந்தது. இதில், சிறந்த இயற்கை விவசாயிக்கான விருது, பல்லடம் அடுத்த, கேத்தனுார் கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி பழனிசாமிக்கு கிடைத்தது. சமீபத்தில், தமிழக அரசு சார்பில், சிறந்த இயற்கை விவசாயிக்கான விருது பெற்ற பழனிசாமிக்கு, தற்போது, தென்னிந்திய அளவி லான இயற்கை விவசாயி விருதும் கிடைத்துள்ளது. பிரதமரின் எண்ணம் நிறைவேற, அனைவரும் இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு காட்டவேண்டும் என, பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: கடந்த, 1968ல் விவசாய தொழில் துவங்கி, நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி வந்தேன். அதன்பின், இயற்கை உயிராற்றல் வேளாண்மை என்ற புத்தகத்தை படித்த பின், 1985ம் ஆண்டு முதல் முழுமையான இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு விவசாயி, அதிகாலையில் எழுந்து, தொழிலாளர்களுடன் விளை நிலத்தில் இருந்தால்தான் விவசாயம் வெற்றி பெறும். உரத்தொழிற்சாலையான கால்நடைகள் மட்டுமன்றி, நம்மிடமே எத்தனையோ இயற்கை பூச்சிக்கொல்லிகள், மருந்துகள் உள்ளன. பல ஆண்டு களுக்கு முன், மாவட்டத்துக்கே ஓரிரு டாக்டர்கள்தான் இருப்பார்கள். இன்று, தாலுகா அளவிலேயே, 15க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உருவாகி விட்டன. நாம், நமது இயற்கை விவசாய முறைகளை மறந்து, பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்திய காய்கறிகளை உண்பதால், அது விஷமாக நமது உடலில் பரவி, நோய்களுக்கு ஆளாகி வருகிறோம். நஞ்சுள்ள உணவுகளை உண்பதால்தான் இத்தனை பிரச்னைகள் ஏற்படுகிறது என்பது தெரிந்தும், அதிலிருந்து விடுபட யாரும் முயற்சிப்பதில்லை. நமது முழு பாரத தேசமும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவரது எண்ணத்தின்படி, எந்த நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு சென்றாலும், அங்கு வருபவர்களுக்கு இயற்கை காய்கறி விதைகளை இலவசமாக வழங்கி வருகிறேன். வீட்டிலேயே, சாக்கு பைகளில், காய்கறி விதைகளைப் போட்டு, அதில் வரும் இயற்கை காய்கறிகளை பயன்படுத்தினாலே போதுமானது. இதற்காக, யார் காய்கறி விதைகள் கேட்டாலும், அதை இலவசமாக வழங்க நான் தயாராக உள்ளேன். நீங்களே காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்தினால் மட்டுமே, நீங்கள் மட்டுமின்றி, உங்களது தலைமுறையையும் பாதுகாக்க முடியும். பிரதமர் கையால் சிறந்த இயற்கை விவசாயிக்கான விருது கிடைத்தது மகிழ்ச்சி. பிரதமரின் எண்ணத்தின்படி, அனைவரும் இயற்கை விவசாயத்துக்கு மாறினால் அது மேலும் மகிழ்ச்சி தரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி