உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை அகற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது!

குப்பை அகற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது!

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் குப்பை அகற்றும் பிரச்னை, மாநகராட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த துவங்கியிருக்கிறது. அதே நேரம், குப்பையை தரம் பிரித்து அப்புறப்படுத்தும் விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாநகராட்சி மட்டுமின்றி, ஊரகப்பகுதிகளில் குப்பை அகற்றும் பிரச்னை என்பது, பேசு பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, திருப்பூர் மாநகராட்சி சார்பில், தினசரி குப்பை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றை சேகரித்து வைத்து, தரம் பிரிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு பிரத்யேக இடமில்லாததால், ஒட்டு மொத்தமாக பாறை குழிகளில் கொட்டப்படுகின்றன.பாறை குழிகளில் குப்பை கொட்ட, பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இடுவாய் பகுதியில் குப்பை கொட்டுவதற்கான ஏற்பாடுகளை, ஐகோர்ட் வழிகாட்டுதல் படி மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு இடுவாய் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குப்பையை அப்புறப்படுத்த வழியில்லாததால், நகரின் பல இடங்களில், குப்பை தேங்கி கிடக்கிறது. ஏ.வி.பி. லே - அவுட் செல்லும் ரோட்டில் அனுப்பர்பாளையம் ரோட்டில் மலை போல் குவிந்துக் கிடக்கிறது.

அதிகரிக்கும் விழிப்புணர்வு

அதே நேரம், குப்பை பிரச்னைக்கு தீர்வு காண, வீடுகளில் இருந்தே குப்பையை தரம் பிரித்து அப்புறப்படுத்துவது மட்டும் தான் ஒரே வழி என்பதை பொது மக்கள் உணரத் துவங்கியிருக்கின்றனர்; அதுதொடர்பான விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, வீடு, ஓட்டல், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியேற்றப்படும் பாலிதீன் பை, அட்டை பெட்டி உள்ளிட்ட பொருட்களை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடுக்கு அனுப்பி வைக்கும் உலர் கழிவு நிறுவனங்கள் ஆங்காங்கே உருவாகி வருகின்றன. திருப்பூர், பொங்குபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள உலர் கழிவு மறுசுழற்சி மையத்திற்கு, இடுவாய், 63 வேலம்பாளையம், சின்னகாளிபாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் நேரில் சென்று, பாலிதீன் உள்ளிட்ட மக்காத பொருட்கள் எவ்வாறு தரம் பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்பதை பார்வையிட்டனர். தமிழ்நாடு கழிவு மேலாண்மை அமைப்பினர், அதுதொடர்பான விளக்கத்தை அளித்தனர்.

மறுபயன்பாட்டுக்கு செல்லும் பாலிதீன் பொருட்கள்

சில, எம்ப்ராய்டரி போர்ம் நிறுவனத்தினர் தங்களின் பாலிதீன் பொருட்களை எங்களிடம் வழங்க துவங்கியிருக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகளும், மக்காத பாலிதீன் பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறியுள்ளனர். உணவுக்கழிவு மற்றும் நாப்கின் தவிர, பிளாஸ்டிக் தொடர்புடைய அனைத்து பொருட்களையும் வாங்கி, அவற்றை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடுக்கு அனுப்பி வைக்கிறோம்; எங்களிடம், தினசரி, 90 டன் பாலிதீன் பொருட்களை கையாளும் திறன் உள்ளது; ஆனால், 30 முதல், 35 டன் மட்டுமே வருகிறது; அதுவும், பெரும் பகுதி வெளியூரில் இருந்து கொண்டு வரப்படுகிறது. திருப்பூரில் இருந்து மட்டும், தேவையான அளவு பாலிதீன் குப்பை கிடைக்கும் பட்சத்தில் அதில் மட்டும் கவனம் செலுத்த முடியும். - வேல்முருகன், உலர் கழிவு நிறுவனம்

தரம் பிரித்து அகற்றுவதே ஒரே தீர்வு

வீடுகளில் இருந்தே குப்பையை தரம் பிரித்து அகற்றுவது மட்டுமே, பிரச்னைக்கு தீர்வாக அமைய முடியும். திருப்பூர் மாநகராட்சியில், ஒவ்வொரு வார்டிலும், 100 சதவீதம் குப்பையை தரம் பிரித்து வழங்கும் திட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். திருப்பூரில் உள்ள அனைத்து தன்னார்வ அமைப்பினரையும் ஒன்றிணைத்து, குப்பை பிரச்னையை எவ்வாறு கையாள்வது, அவரவர் பகுதியில் எதுமாதிரியான விழிப்புணர்வு ஏற்படுத்துவது, எந்தெந்த வகையில் குப்பை சேகரித்து அப்புறப்படுத்துவது குறித்து ஆலோசனை பெற்று, அதற்கு செயல் வடிவம் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். - பத்மநாபன் ஒருங்கிணைப்பாளர், துப்புரவாளன் அமைப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ