கலெக்டரிடம் குறைகளை கொட்டிய பொதுமக்கள்
திருப்பூர்,; திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கம்:திருப்பூர் மாவட்டத்தில், பீஹார், ஒடிசா, பஞ்சாப், ஹரியானா மாநில தொழிலாளர் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்கள், வீடு வீடாக சென்று, கிலோ 10 ரூபாய்க்கு ரேஷன் அரிசி வாங்கிச் செல்கின்றனர். வடமாநில தொழிலாளர்களுக்கு மஞ்சள் நிறத்தில் தற்காலிக ரேஷன் கார்டு வழங்கி, மாதம் 20 கிலோ அரிசி வினியோகிக்க வேண்டும். தமிழக ரேஷன் அரிசி, கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்.அலங்கியம் பகுதி பொதுமக்கள்:தாராபுரம் தாலுகா, அலங்கியம், மேட்டுக்காடு பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம். கூலி வேலை செய்து சிரமப்படுகிறோம். கலெக்டர் தலையிட்டு, மேட்டுக்காடு பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அம்மாபாளையம் பகுதி மக்கள்:திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மாபாளையம் - ராக்கியாபாளையம் இடையே, புதிய தார் ரோடு அமைக்கப்பட்டது. ராசாத்தாள் குளம் அருகே, பாதியிலேயே பணிகளை நிறுத்திவிட்டனர். ராசாத்தாள் குளம் முதல் ராக்கியாபாளையம் வரை ரோடு, குண்டும் குழியுமாக உள்ளது. நிறுத்தப்பட்டுள்ள இடத்திலிருந்து ராக்கியாபாளையம் வரை, தார் ரோடு அமைக்க வேண்டும்.n அவிநாசி தாலுகா, ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, முட்டியங்கிணறு ஏ.டி., காலனி மக்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை, ஆன்லைன் பட்டாவாக மாற்றித்தரக்கோரி மனு அளித்தனர்.n அரசு பஸ் நடத்துனர் கோபால்சாமி, தனக்கு தவறான குறிப்பாணை வழங்கிய அரசு போக்குவரத்து கழகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், குறிப்பாணையை ரத்து செய்யக்கோரியும், கலெக்டர் மற்றும் தொழிலாளர் துணை கமிஷனரிடமும் மனு அளித்துள்ளார்.இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து, 350 மனுக்கள் பெறப்பட்டன.அம்மனுக்கள், நடவடிக்கை எடுப்பதற்காக, துறை சார்ந்த அரசு அலுவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.