திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக, இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டருக்கு பயனாளிகள் தேர்வு செய்வதிலும், ஸ்கூட்டர் வழங்குவதிலும் நடைபெற்றுவரும் முறைகேடுகள் வெளிச்சமாகி வருகின்றன. தகுதியற்றோருக்கு ஸ்கூட்டர் வழங்கிவிட்டு, குட்டு வெளிப்படும்போது, பறிமுதல் நடவடிக்கை எடுக்கின்றனர். வெளிச்சத்துக்கு வந்த சில முறைகேடுகள்...* அரசு துறை சார்ந்த துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், இலவச ஸ்கூட்டர் பெற தகுதியில்லை. விதிமுறை குறித்து நன்கு தெரிந்தும், தாராபுரத்தில் ரேஷன் ஊழியர், திருப்பூர் தெற்கு தாலுகாவில் சத்துணவு ஊழியருக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கிவிட்டு, பறிமுதல் செய்துள்ளனர்.* கடந்த 2023ல் ஸ்கூட்டர் பெற்ற பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி, மீண்டும் பயனாளி பட்டியலில் சேர்க்கப்பட்டு, பின் நீக்கப்பட்டுள்ளார்.* அறுபது சதவீதத்துக்கு மேல் உடல்பாதிப்பு பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளே ஸ்கூட்டர் பெற தகுதியுள்ளவர்கள். ஆனால், ஐம்பது சதவீத உடல் பாதிப்பு பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணை பயனாளியாக தேர்வு செய்துவிட்டனர். அவருக்கான ஸ்கூட்டரும் வந்துவிட்டது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து ஆர்.சி., புக் வழங்கிவிட்டனர். விஷயம் வெளியே கசிந்ததால், ஸ்கூட்டரை அப்பெண்ணுக்கு வழங்காமல், ஷோரூமில் சத்தமில்லாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.* கருவம்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்கிற 26 வயது மாற்றுத்திறனாளி இளைஞருக்கு ஒதுக்கப்பட்ட ஸ்கூட்டருக்கான ஆர்.சி.,புக்கை மட்டும் நான்கு மாதங்களாக ஸ்கூட்டரை கண்ணில் காட்டவில்லை. 'தினமலர்' நாளிதழில், கடந்த, 25ம் தேதிசெய்தி வெளியானதும், ஸ்கூட்டர் அவருக்கு வழங்கப்பட்டது. வெங்கடேஸ்வரன் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஸ்கூட்டரை, தகுதியற்ற ஒருவருக்கு வழங்கியது தெரிய வந்தது.முறைகேடுகள் தொடர்ச்சியாக அம்பலமாகி வருகின்றன. கலெக்டர் சாட்டையை சுழற்றினால், தகுதியுள்ள ஏராளமானோர் விண்ணப்பித்து ஓராண்டுக்கு மேலாகியும் ஸ்கூட்டர் கிடைக்காமல் பரிதவிக்கும் நிலை மாறும்.
'சிறப்புக்குழு அமைத்து
விசாரிக்க வேண்டும்'''தொடர் முறைகேடுகள் குறித்து சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தவேண்டும். முறைகேடுகளில் தொடர்புடைய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என, சமூக ஆர்வலர் சரவணன், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தார்.மாற்றுத்திறனாளி மகாதேவன் அளித்த மனுவில், ''மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், ஆன்லைன் பதிவு அடிப்படையில் ஸ்கூட்டர் வழங்குவதில்லை. ஸ்கூட்டர் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும்'' என்று கூறியுள்ளார்.