உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆதரவற்ற முதியவர்களுக்கு அடைக்கலம் இல்லை

ஆதரவற்ற முதியவர்களுக்கு அடைக்கலம் இல்லை

பல்லடம்; பல்லடம் 'ஈகை' அறக்கட்டளை நிர்வாகி கார்த்திகேயன் கூறியதாவது:கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் எவ்வாறு சிரமப்பட்டார்கள் என்பதை களத்தில் இருந்து அறிந்து கொண்டதால், அன்றிலிருந்து, ஈகை அறக்கட்டளையை துவங்கி, தன்னார்வலர்கள் பலரும் கைகோர்த்து, ஆதரவற்றவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்து வருகிறோம். ஆதரவற்ற, மனவளர்ச்சிக்கு குன்றியவர்களை மீட்டு, அவர்களுக்கு உணவு உடை உள்ளிட்ட வற்றை வழங்கி, ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்து வருகிறோம். சமீபத்தில், வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள நிழற்குடைக்குள் முதியவர் ஒருவர் படுத்த படுக்கையாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.அவர் திருப்பூரில் இருந்து சைக்கிளில் வந்தபோது, விபத்துக்குள்ளாகி, எழுந்து நடக்கவும் வழியின்றி, இதே பகுதியில் படுத்த படுக்கையாக கிடந்துள்ளார். இயற்கை உபாதைகள் கழித்தபடி, ஈக்கள் புழுக்களுக்கு மத்தியில், மிகவும் மோசமான நிலையில் இருந்தார். அவரது பெயர், எந்த ஊர் என்ற விவரங்களை கூட அவரால் கூற முடியவில்லை. காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 90 வயதான அவருக்கு சிகிச்சை வழங்கி ஏதாவது இல்லத்தில் சேர்க்கலாம் என்றால், நடக்க இயலாமல் உள்ளவர்களை சேர்க்க இயலாது என, பல்வேறு ஆதரவற்றோர் இல்லங்களிலும் கைவிரித்து விட்டனர்.இது போன்ற ஆதரவற்றோரை பராமரிக்க அரசே ஏதாவது ஒரு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ