உடுமலை: உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த, ஜூன், 16ல் அணை நிரம்பி, நான்கு மாதம் ததும்பிய நிலையில் காணப்பட்டது. தென்மேற்கு பருவ மழையால், 9 டி.எம்.சி., நீர்வரத்தும், 5 டி.எம்.சி., வரை உபரியாக நீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்து, கடந்த, ஜூன் 7 முதல், அக்., 20 வரை, பழைய ஆயக்கட்டு, ராஜவாய்க்கால் பாசனத்திலுள்ள, 7,520 ஏக்கர் நிலங்களுக்கு நீர் திறக்கப்பட்டது. மேலும், அமராவதி பழைய ஆயக்கட்டு, அலங்கியம் முதல் கரூர் வரை, ஆற்றின் வலது கரை, 10 கால்வாய் பாசனத்திற்குட்பட்ட, 21 ஆயிரத்து, 867 ஏக்கர் நிலங்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25 ஆயிரத்து, 250 ஏக்கர் நிலங்களுக்கு, 2026 ஜூன், 31 வரை நீர் வழங்கப்பட உள்ளது. மேலும், பழைய ஆயக்கட்டு பாசனம், ஆறு ராஜவாய்க்கால் பாசன நிலங்களில் சம்பா நெல் சாகுபடிக்காக, நவ., 15ல் நீர் திறக்கப்பட்டு, வரும் 2026 பிப்., 28 வரை நீர் வழங்கப்பட உள்ளது. அணையிலிருந்து பாசன நிலங்களுக்கு நீர் திறக்கப்பட்டதால், அணை நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதனால், முழுமையாக பாசன நிலங்களுக்கு நீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஜன., மாதம் வரை மட்டுமே நீர் இருக்கும் என்பதால், கோடை காலத்தில் குடிநீர் மற்றும் அணையை ஆதாரமாகக்கொண்ட வன விலங்குகளுக்கு கூட நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. அமராவதி அணை நீர் இருப்பு பற்றாக்குறையாக இருந்த நிலையில், பாசன நிலங்களுக்கு வட கிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து நீர் திறக்க, அரசு அனுமதியளித்திருந்தது. இதனால், பருவ மழையை எதிர்பார்த்து அதிகாரிகளும், விவசாயிகளும் காத்திருந்தனர். வட கிழக்கு பருவ மழை காலமான, அக்., மாதம் மற்றும் நவ., மாதமும் போதிய மழை பொழிவு இல்லாத நிலையில், அணை நீர் இருப்பு வேகமாக குறைந்து வந்தது.கடந்த 22ம் தேதி, அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில், 66.97 அடியாக குறைந்தது. நீர்மட்டம் உயர்வு
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து, அணை நீர் பிடிப்பு பகுதிகளான, மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த, நான்கு நாட்களில் அணை நீர்மட்டம், ஆறு அடி உயர்ந்துள்ளது. அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால், இரு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணை நிலவரம்
நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடியில், 72.54 அடியாக காணப்பட்டது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 2,585.09 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 2,111 கனஅடியாக இருந்தது. அணையிலிருந்து ஆற்றில், 60 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது.கடந்தாண்டு, இதே நாளில், 87.67 அடி நீர்மட்டம் இருந்த நிலையில், நடப்பாண்டு நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. வரும் நாட்களில், மழை பொழிவு அதிகரித்து,அணை நீர்மட்டம் வேகமாக உயரும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.