கடன் பத்திரம் திட்டத்தை கைவிட்ட திருப்பூர் மாநகராட்சி
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி எல்லை விரிவுபடுத்தப்பட்டதை தொடர்ந்து, 2017 - 20ம் ஆண்டு, 'அம்ரூத்' திட்டத்தில் விரிவுபடுத்திய பாதாள சாக்கடை திட்டம், 605 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.எஸ்.பெரியபாளையம், சின்னாண்டிபாளையம் பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, திட்டம் துவங்கியது. பல்வேறு காரணங்களால் பணி தாமதமானது. கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, நடைமுறை சிக்கல் போன்றவற்றால், திட்ட மதிப்பீடு மேலும் அதிகரித்து, 799 கோடி ரூபாயாக உயர்ந்தது.கூடுதலாக உயர்ந்த தொகையை ஈடுகட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திட்டப்பணிகள் நிறைவடைந்த நிலையில் ஒப்பந்த நிறுவனங்களுக்கு, 85 கோடி ரூபாய்க்கும் மேல் நிலுவை ஏற்பட்டுள்ளது. நிதி திரட்டுவதற்காக கடந்தாண்டு, 100 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரம் வெளியிட மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக இரு தனியார் நிறுவனங்கள் பணியமர்த்தப்பட்டு, அறிக்கை பெறப்பட்டது.கடன் பத்திரங்கள் வெளியிடும் நிலையில் அதற்கு, 9 முதல் 9.5 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டும். ஏற்கனவே நிதி பற்றாக்குறையில் உள்ள மாநகராட்சிக்கு கூடுதல் சுமை ஏற்படும் என கணக்கிடப்பட்டதால், கடன் பத்திரம் வெளியிடும் முடிவை மாநகராட்சி நிர்வாகம் கைவிட்டது.செலவை ஈடு கட்டும் வகையில், 'டுபிட்கோ' எனப்படும் நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் மற்றும் 'டிபுசில்' எனப்படும் நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் ஆகியவற்றில், தலா, 50 கோடி ரூபாய் என, மொத்தம், 100 கோடி ரூபாய் கடன் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், வட்டி குறைவாக இருக்கும் என்பதால், மாநகராட்சி மாற்றி யோசித்துள்ளது.