உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமைச்சர்களுக்கு தக்காளி பார்சல்: விவசாயிகள் நுாதன போராட்டம்

அமைச்சர்களுக்கு தக்காளி பார்சல்: விவசாயிகள் நுாதன போராட்டம்

பல்லடம்: தக்காளி விலை சரிவால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், அமைச்சர்களுக்கு தக்காளி பார்சல் அனுப்பும் நுாதன போராட்டம் பல்லடத்தில் நேற்று நடந்தது. தபால் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோருக்கு பார்சலில் தக்காளி அனுப்பி வைக்கப்பட்டது. மாநில தலைவர் சண்முகம் பேசியதாவது: கடந்த காலங்களில் தக்காளி விலை உயர்ந்த போது, அண்டை மாநிலங்களிலிருந்து வாங்கி, மக்களுக்கு குறைந்த விலைக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இன்று தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் கட்டுப்படி ஆகாத விலையால், அவற்றை வீதி அல்லது ஓடைகளில் கொட்டும் அவலம் உள்ளது. தக்காளி விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வரும் சூழலில், தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கவலை அளிக்கிறது. கடந்தாண்டு தக்காளி விலை உயர்ந்த போது, தக்காளியை பதுக்கி வைப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிக்கை வெளியிட்ட அமைச்சர்கள், விலை வீழ்ச்சியால் தற்போது பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை காப்பாற்ற அறிக்கை வெளியிடாதது ஏன்? பதுக்கி வைத்தால் தக்காளி அழுகி விடும் என்பது கூட அறிக்கை வெளியிட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தெரியாதா? விவசாயிகளிடமிருந்து தக்காளியை கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் வாயிலாக பொதுமக்களுக்கு வினியோகிக்க வேண்டும். கோரிக்கையை அரசுக்கு நினைவூட்டும் வகையில், வேளாண், கூட்டுறவு, உணவு துறை அமைச்சர்களுக்கு தக்காளி பார்சல் அனுப்புகிறோம். அடுத்ததாக தக்காளியுடன் தலைமை செயலகம் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை