பணிமனையின் சுற்றுச்சுவர் இடிப்பு தொழிற்சங்கத்தினர் போலீசில் புகார்
உடுமலை : அரசு போக்குவரத்துக்கழக கூண்டு கட்டுமான பிரிவு பணிமனை வளாக சுற்றுச்சுவரை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தொழிற்சங்கத்தினர் சார்பில், உடுமலை போலீசில் புகார் கொடுத்தனர்.திருப்பூர் மண்டல அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) மற்றும் எல்.பி.எப்., சார்பில் உடுமலை டி.எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் கொடுத்தனர்.புகார் மனுவில், 'தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கோவை, திருப்பூர் மண்டலத்துக்கு சொந்தமான கூண்டு கட்டுமான பிரிவு பணிமனை வளாகம் உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அமைந்துள்ளது.இந்த பணிமனையின் மேற்கு பக்கம் உள்ள சுற்றுச்சுவரை எவ்விதமான அனுமதியும் பெறாமல் தனியார் நிறுவனத்தினர் இடித்துள்ளனர். இது குறித்து ஏற்கனவே, நிர்வாகம் தரப்பில், புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால், உடுமலை கிளை மற்றும் மாவட்ட அளவில் பணியாற்றும் தொழிலாளர்கள் மத்தியில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உடனடியாக அரசு சொத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுற்றுச்சுவரை இடிக்க பயன்படுத்திய இயந்திரத்தின் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.