உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாய நிலங்களில் மரச்சாகுபடி திட்டம்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் நடவு

விவசாய நிலங்களில் மரச்சாகுபடி திட்டம்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் நடவு

உடுமலை; வனத்துக்குள் திருப்பூர்-11 திட்டத்தின் கீழ், உடுமலை பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு தீவிரமாக நடந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ், உடுமலை அருகேயுள்ள குறிஞ்சேரி விவசாயி சிவமணிக்கு சொந்தமான நிலத்தில், ஆயிரம் பாக்கு மரக்கன்றுகள், 800 செம்மரம், 100 எலுமிச்சை என, 1,900 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. அதே போல், மடத்துக்குளம் அருகேயுள்ள மடத்துாரில் உள்ள ராமநாதனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், 527 கோகோ மரக்கன்றுகள் நடவு செய்து தரப்பட்டது. பெதப்பம்பட்டி, சிக்கனுாத்து, பொன்ராஜ், நந்தகுமார் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில், 2 ஆயிரம் சவுக்கு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையிலும், பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையிலும் மரச்சாகுபடி திட்டமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது. குறைந்த நீர்த்தேவை, பராமரிப்பு, தொழிலாளர் செலவினம் குறைவு மற்றும் அதிக வருவாய் அடிப்படையிலும், பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இத்திட்டத்தில் குறைந்த ஆண்டுகளில், அதிக வருவாய் கொடுக்கும் வகையிலும், விவசாய நிலங்கள், தொழிற்சாலை வளாகங்களில் பசுமை வேலியாகவும், சவுக்கு மரக்கன்றுகள் நடவு செய்து வருகின்றனர். வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், பள்ளி, கல்லுாரி, கோவில் வளாகங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான பூங்கா நிலங்கள் மற்றும் தொழிற்சாலை, கோழிப்பண்ணை வளாகங்களில் பசுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையிலும், மரக்கன்றுகள் இலவசமாக நடவு செய்து தரப்படுகிறது. மரக்கன்றுகள் நடவு செய்து, முறையாக பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை