இரண்டு சார்-பதிவாளர் பணியிடம் காலி அவிநாசியில் பத்திரப்பதிவு படுதாமதம்
அவிநாசி : மூன்று மாதம் முன் இரண்டு சார்-பதிவாளர்களும், இடமாற்றம் செய்த நிலையிலேயே இன்று வரை அவிநாசி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.அவிநாசி சார்-பதிவாளர் அலுவலகத்தில் இரண்டு சார்-பதிவாளர், ஒரு ஹெட் கிளார்க், இரண்டு இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் என குறைந்த பட்சம் ஒன்பது பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது இரண்டு நிரந்தர பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்.தொட்டிபாளையம் அலுவலகத்தில் பணியாற்றும், 'ஹெட் கிளார்க்' கோமதி என்பவர் பொறுப்பு அலுவலராக வாரத்திற்கு மூன்று நாள் அவிநாசிக்கு வந்து பத்திரப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.தினமும், நுாற்றுக்கும் மேற்பட்ட பத்திரம் பதிவு செய்யும் முதன்மை அலுவலகமாக இருந்து வந்த அவிநாசி அலுவலகம் தற்போது அதிகாரிகள் இல்லாமல், குறைந்த எண்ணிக்கையிலேயே பத்திரம் பதிவாகிறது. இதனால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.எனவே, பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் பொருட்டும், அரசுக்கு வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டும் உடனே, சார்-பதிவாளர் உள்ளிட்ட பணியாளர்களை நியமிக்க வேண்டுமென்பதே அவிநாசி வட்டார பொதுமக்கள் மற்றும் பத்திரப்பதிவு எழுத்தாளர்களின் கோரிக்கையாக உள்ளது.