அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் தடையற்ற நீர் வினியோகம்; தகவல் தொடர்பு உறுதிப்படுத்த நடவடிக்கை
திருப்பூர் : அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தில், குளம், குட்டைகளுக்கு தடையற்ற நீர் வினியோகம் செய்வதை உறுதிப்படுத்த, தகவல் தொடர்பு ஏற்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மூன்று மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்டுள்ள, 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டும் பணி நடந்து வருகிறது. இருப்பினும், பெரும்பாலான குளம், குட்டைகளுக்கு நீர் வினியோகம் சீராக இல்லை; முழுமையாக நீர் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு, திட்டம் சார்ந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் உள்ளது.இந்தக் குறையை, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கவனத்துக்கும், விவசாயிகள் கொண்டு சென்றனர். அதன் விளைவாக, நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு கலெக்டர் அனுப்பியுள்ள கடிதத்தில், 'அத்திக்கடவு அவிநாசி நீர் செறிவூட்டும் திட்ட குளம், குட்டைகளுக்கு நீரேற்ற நிலையத்தில் இருந்து செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, நீர் முழுமையாக சென்றடையவில்லை. ஒவ்வொரு பம்பிங் ஸ்டேஷன்களிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே மின் மோட்டார் இயக்கப்படுகிறது. எனவே, குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டப்படுவது தொடர்பான தகவலை தெரிவிக்க, திட்டப் பொறியாளரின் மொபைல் போன் எண்ணை, சம்மந்தப்பட்ட இடங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில், பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கூறப்பட்டுள்ளது.