பிரதான ரோடுகளில் வாகனங்கள் நிறுத்தம்; போலீசார் நடவடிக்கை அவசியம்
உடுமலை; உடுமலை பிரதான ரோடுகளில், விதிமுறை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துகள் அதிகரிக்கின்றன.கோவை, பொள்ளாச்சியிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கும், மூணார், மறையூருக்கு செல்வதற்குமான பிரதான வழித்தடமாக உடுமலை உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் உடுமலை நகரை கடந்து செல்கின்றன.ஆனால் பிரதான ரோடுகளில் சரக்கு வாகனங்கள், கார்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் முதல், பழைய பஸ் ஸ்டாப் வரை, ரோட்டின் பாதி வரை கார் மற்றும் கனரக வாகனங்கள் வரிசை கட்டுகின்றன.ஒருவழிபாதையாக இருப்பினும், பாதசாரிகள் நடப்பதற்கும் ரோட்டை கடப்பதற்கும் இடமில்லாமல் வாகனங்களின் இடுக்குகளில் நுழைந்து செல்ல வேண்டி வருகிறது.உடுமலை - பழநி ரோட்டில் சந்தைக்கு வரும் லாரிகளும், இரண்டு பக்கமும் நிறுத்தப்படுவதால், இரண்டு சக்கர வாகன ஓட்டுநர்கள் எதிரே வரும் வாகனத்தை கவனிக்காமல் ரோட்டை கடக்கும்போது விபத்துக்குள்ளாகின்றனர்.உடுமலை - தாராபுரம் ரோட்டிலும், இதே நிலையில் சரக்கு வாகனங்கள் ரோட்டின் பாதி வரை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.நான்கு பக்கத்திலிருந்தும் வருவோர், சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மறுபக்கத்திலிருந்து வரும் வாகனங்களை பார்க்க முடியாமல் திண்டாடுகின்றனர்.உடுமலையின் பிரதான ரோடுகள் முழுவதும், மாலை நேரங்களில் கனரக வாகனங்களின் 'பார்க்கிங்' பகுதிகளாகவே மாறிவிட்டன. இரவுநேரத்தில் இப்பிரச்னையால் அதிகமான விபத்துகளும் நடக்கிறது.பொதுமக்கள் இதுகுறித்து வாகன ஓட்டுநர்களிடம் பேசினாலும், மாற்றி நிறுத்துவதற்கும், வழிவிடுவதற்கும் மறுக்கின்றனர். முறையான கண்காணிப்பு இல்லாததால் இப்பிரச்னை தொடர்ந்து நடக்கிறது.விதிமுறை மீறும் வாகன ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பார்க்கிங்கை முறைப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.