பூட்டிய வீட்டில் துணிகரம்; ரூ.பல லட்சம் திருடப்பட்டதா?
பல்லடம்; பல்லடம் அடுத்த ராயர்பாளையம், அபிராமி நகர் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் ஜெயகுமார், 42; ரியல் எஸ்டேட் உரிமையாளர். அபிராமி நகர் முதல் வீதியில் வசிக்கும் மாமனாருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், ஜெயகுமார் தனது குடும்பத்துடன் அங்கு தங்கியபடி, அவ்வப்போது தனது வீட்டுக்கும் சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம், தொழில் தொடர்பாக எடுத்து வந்த பல லட்சம் ரூபாய் பணத்தை, தனது வீட்டில் வைத்துவிட்டு, வழக்கம்போல் மாமனார் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. நேற்று காலை திரும்பி வந்த பார்க்கும்போது, பூட்டிய வீட்டை உடைத்து, பணம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து, ஜெயகுமார் அளித்த தகவலின் பேரில், போலீசார் விசாரணையை துவக்கினர். முன்னதாக, விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட மோப்பநாய், இரண்டு முறை மெயின் ரோடு வரை சென்று வந்தது. தொடர்ந்து, கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, போலீசார் அனைவரும் பாதுகாப்பு பணிக்காக சென்ற நிலையில், பூட்டிய வீட்டை உடைத்து, பணம் திருடப்பட்ட சம்பவம், ராயர்பாளையம் பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருகிலுள்ள 'சிசிடிவி' காட்சிகளை கைப்பற்றி போலீசார் கூடுதல் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தள்ளுவண்டி மாடல் கார்
திருட்டு சம்பவம் தொடர்பாக தடயங்களை சேகரிக்க திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டார்.அவர் வந்த அம்பாசிட்டர் கார் பாதியில் நின்றது. ஸ்டார்ட் செய்ய முடியாமல் டிரைவர் திணறிய நிலையில், அருகில் இருந்த இளைஞர்கள், பொதுமக்கள் காரை தள்ளி உதவினர்.