அரசு அலுவலகங்களில் கழிவு பொருள் சேகரிப்பு
திருப்பூர்; துாய்மை மிஷன் 2.0 திட்டத்தில், அரசு அலுவலகங்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கழிவு சேகரிப்பு மற்றும் அகற்றும்பணி துவக்க விழா திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே முன்னிலைவகித்து, துவக்கி வைத்தார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கமித்திரை, உதவி திட்ட அலுவலர் (வளர்ச்சி) சரவணன் உள்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். 'சுத்தமே சுகாதாரம் என்பதை என் வாழ்வியல் வழிமுறையாக கடைபிடிப்பேன்; துாய்மை மற்றும் சுகாதாரத்துடன் கூடிய வளர்ச்சியே லட்சியம். எனது அலுவலகத்தையும், சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக்கொள்வேன்' என, அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள 360 அரசு அலுவலக அறைகள் மற்றும் மாநகராட்சி அலுவலகம், ஆறு நகராட்சி அலுவலகங்கள்; 14 பேரூராட்சி அலுவலகங்கள்; 13 ஒன்றிய அலுவலகங்கள்; 265 ஊராட்சி அலுவலகங்கள்; 14 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்கள் ; 1,472 அங்கன்வாடி மையங்கள்; மூன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள்; ஒன்பது தாலுகா அலுவலகங்கள்; 366 வி.ஏ.ஓ., அலுவலகங்கள் உள்பட அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும், கழிவு பொருட்கள் அகற்றுதல் மற்றும் சேகரிப்பு பணி நடைபெறுகிறது.