அத்திக்கடவு - அவிநாசி திட்டம் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் அதிகாரிகள் உறுதி
அவிநாசி; அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், 1,040 குளம், குட்டைகளுக்கும் முழுமையாக தண்ணீர் செல்ல வேண்டுமென்று, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளரிடம் போராட்டக்குழுவினர் கோரிக்கை விடுத்தனர். அவிநாசி, பாரதிதாசன் வீதியில் உள்ள நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில், நேற்று போராட்ட குழு கூட்டமைப்பினர் செயற்பொறியாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மின் வினியோக பணிநிறைவு பெறவில்லை போராட்டக் குழுவினர் கூறியதாவது: திட்டம் துவங்கப்பட்டு 2 ஆண்டு கடந்த நிலையில் 100 சதவீத பணிகள் நிறைவு பெற்றதாகவும், நீர்வள ஆதாரத்துறையினர் தரப்பில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், 1,040 குளம் குட்டைகளுக்கு முழுமையாக தண்ணீர் சென்றடைந்ததாக கூறுகின்றனர். ஆனால், அவிநாசிக்கு மிக அருகேயுள்ள நடுவச்சேரி, தொரவலுார், தெக்கலுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளம் மற்றும் குட்டைகளுக்கு ஒரு ஆண்டு கடந்தும் தண்ணீர் முழுமையாக வந்து சேரவில்லை. இத்திட்டத்தை, 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள எல் அண்ட் டி நிறுவனத்தினரிடம் கேட்டால் நீர்வள ஆதார துறையை கைகாட்டுகின்றனர். நீர்வள ஆதாரத்துறையில் ஆள் பற்றாக்குறை உள்ளது. ஆறு நீரேற்று நிலையங்களில் இன்னும் இரண்டில், 2ம் கட்ட மின் வினியோக பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது. கடந்த மாதம் நடத்திய போராட்டத்தால், இம்மாதம், 22ம் தேதி வரை அதிகாரிகள் அவகாசம் கேட்டிருந்தனர். தற்போது செயற்பொறியாளரை சந்தித்தோம். அதில், 130 குளம், குட்டைகளுக்கு, இரு வாரங்களுக்குள் முதல் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி, குழாய் உடைப்பு, மின்விநியோகம் சீரான முறையில் தருதல், ஊழியர் பற்றாக்குறையை சரி செய்தல் என அனைத்து பிரச்னைகளையும் சரி செய்து, தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அடுத்த கட்ட போராட்டம்? இதுதவிர, மின் தடை, மோட்டார்கள் திருட்டு, குழாய் உடைப்பு ஆகியவற்றை உடனுக்குடன் செயற்பொறியாளர் அலுவலகத்தில் தெரிவிக்க வசதியாக அந்தந்த பகுதிகளில் உள்ள குளம் மற்றும் குட்டைகளுக்கு பதிவு எண் தருவதாகவும் கூறியுள்ளார். இதனால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து, செயற்பொறியாளரின் நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.