உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீர் திறப்பு தாமதம்; பி.ஏ.பி., அலுவலகம் முற்றுகை

நீர் திறப்பு தாமதம்; பி.ஏ.பி., அலுவலகம் முற்றுகை

பொங்கலுார்; தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதாக கூறி, வடசின்னாரிபாளையம், குள்ளம்பாளையம் பகுதி விவசாயிகள், பொங்கலுார் பி.ஏ.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தற்போது, பி.ஏ.பி.,-ல் நான்காம் மண்டல பாசனம் நடக்கிறது. காங்கயம், வெள்ளகோவில் பகுதிக்கு ஜீரோ பாய்ன்டில், 4.5 அடி வீதம், 15 நாட்கள் தண்ணீர் வழங்கப்படுகிறது. 'காங்கயம், வெள்ள கோவில் பகுதிக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை விட ஒரு நாள் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வட சின்னாரிபாளையம், குள்ளம்பாளையம் பகுதியில் 3,227 ஏக்கர் பாசனம் பெறுகிறது. அப்பகுதி வாய்க்காலுக்கு நேற்று தண்ணீர் திறந்து இருக்க வேண்டும். கூடுதலாக தண்ணீர் திறந்து விட்டதால் தண்ணீர் திறக்கப்படவில்லை' என்று வடசின்னாரிபாளையம், குள்ளம்பாளையம் பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டி, பொங்கலுார், பி.ஏ.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடன் பொங்கலுார் உதவி கோட்ட அலுவலர் சுபாஷினி பேச்சு வார்த்தை நடத்தினார். ''எங்களுக்கு ஏன் இன்று தண்ணீர் திறக்கவில்லை. ஒவ்வொரு பகுதிக்கும் கூடுதல் தண்ணீர் வழங்கினால் ஐந்து சுற்றுக்கு பதிலாக நான்கு சுற்றாக குறைந்து விடும். அரசாணை 135 நாட்களுக்குத்தான் உள்ளது. மீண்டும் ஒருமுறை அரசாணை பெற முடியாது'' என்று கூறி விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'உயர் அதிகாரிகளிடம் கேட்டு தகவல் சொல்கிறேன்' என்றார் உதவிக்கோட்ட அலுவலர். விவசாயிகள் காலை, 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை காத்திருந்தனர். பின் பிற்பகல் உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டு, இன்று தண்ணீர் திறந்து விடுவதாக உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து விவசாயிகள் அவரிடம் மனுவை அளித்தனர். பின் கலைந்து சென்றனர். இதில் பி.ஏ.பி., பாசன சபை தலைவர்கள் கோபால், பாலசுப்பிரமணி, மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். அளவு குறைந்ததால்கூடுதல் நேரம் நீர்காங்கயம் ஜீரோ பாயின்டில், 4.5 அடி தண்ணீர் வந்தால் தான் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர். தண்ணீரின் அளவு குறைந்ததால், 21 மணி நேரம் கூடுதலாக தண்ணீர் வழங்கப்படுகிறது. எனவே இன்று காலை வடசின்னாரிபாளையம் வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்படும். - சுபாஷினி,பி.ஏ.பி., உதவி கோட்ட அலுவலர், பொங்கலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை