பாதுகாப்பு இல்லை எங்களுக்கு...விவசாயிகள் தற்காப்பு விழிப்புணர்வு பேரணி
திருப்பூர், ; தொடரும் விவசாயிகள் கொலை சம்பவங்களை கண்டித்து, திருப்பூரில் விவசாயிகள் திரண்டு, நேற்று தற்காப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.திருப்பூர் மாவட்டம், பல்லடம், சேமலைக்கவுண்டம்பாளையத்தில், கடந்த நவ., 29ம் தேதி விவசாய குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்டனர். குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படவில்லை. இச்சம்பவத்தை தொடர்ந்து, விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று விவசாய அமைப்புகள் குற்றஞ்சாட்டிவந்தன.அனுமதி மறுப்புவிவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில், குத்தீட்டி, வேல், கம்பு உள்ளிட்ட தற்காப்பு ஆயுதங்களுடன் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துவதாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்தது.போலீசார் அனுமதி மறுத்ததையடுத்து நேற்று, திருப்பூர் - பல்லடம் ரோடு லட்சுமி திருமண மண்டபம் அருகே துவங்கிய விழிப்புணர்வு பேரணியில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கம் ஆகியன சார்பில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.காவல் தெய்வம் 'கருப்ப சுவாமி' வேடமிட்ட ஒருவர், முன் செல்ல, கலெக்டர் அலுவலகம் வரை, ஊர்வலம் நடத்தப்பட்டது. 'மூவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்; விவசாயிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும்' என, விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர்.கொடூர சம்பவங்கள்தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:கடந்த இரண்டு ஆண்டுகளில், திருப்பூர், ஈரோடு தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில், வீடுகளில் தனியாக இருந்த விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட எட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. திருப்பூர் மாவட்டம் கள்ளக்கிணற்றில், மது அருந்துவதை தட்டிக்கேட்ட நான்கு விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த மாதம், சேமலை கவுண்டம்பாளையத்தில், இரவு நேரம் வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.திருடர் மீது ஏன் கருணை?விவசாயிகள் தனியாக இருக்கும் வீடுகளில், திருடர்கள், பகல் வேளையில் நோட்டமிடுவதும், இரவு நேரங்களில், கொலை செய்துவிட்டு, பணம், நகைகளை கொள்ளையடிப்பதும் தொடர்கிறது. கொன்று திருடும் திருடர்கள் மீது போலீசார் கருணை காட்டக்கூடாது; வழக்கு முடியும்வரை அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. திருடர்களை திருப்பித்தாக்கி பிடித்துக்கொடுத்தால், தாக்கியதற்காக விவசாயிகள் மீதே போலீசார் வழக்கு பதிவு செய்யும் அவல நிலையை காணமுடிகிறது.தற்காப்பு விழிப்புணர்வு ஏன்?ஏரும், போரும், விவசாயிகளாகிய எங்கள் குலத்தொழில். இதை உணர்த்தவே இந்த தற்காப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளது. திருடர்களிடமிருந்து தங்கள் உயிரையும், உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ள, விவசாயிகள் ஆயுத பயிற்சி எடுக்கவேண்டும். இதை வலியுறுத்தும்வகையில், கிராமங்கள் தோறும் சென்று, தற்காப்பு விழிப்புணர்வு பேரணி நடத்த உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.---பல்லடத்தில் நடந்த மூவர் படுகொலை உள்பட விவசாயிகள் படுகொலை சம்பவங்களைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்த்தும் வகையிலும் திருப்பூரில் நேற்று நடந்த தற்காப்பு விழிப்புணர்வுப்பேரணியில் பங்கேற்ற விவசாயிகள்.
'விவசாயி தற்காப்புக்கு
துப்பாக்கி தேவை'பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில் பணம், நகை, ஆடு, மாடு, மின் ஒயர் திருட்டு சம்பவங்கள் தொடர்கின்றன. திருடர்களை தடுக்கும் விவசாயிகள் படுகொலை செய்யப்படுகின்றனர். விளைநிலங்களில் அமர்ந்து யார் வேண்டுமானாலும் மது அருந்தலாம், தட்டிக்கேட்கும் விவசாயிகளை வெட்டி வீழ்த்தலாம் என்கிற நிலை உருவாகிவிட்டது.விவசாயிகளின் சந்தனமரம், செம்மரம் உள்ளிட்ட மதிப்பு மிக்க மரங்களை வெட்டி திருடும் சம்பவங்களும் அதிகரித்துவருகின்றன. தற்காப்புக்காக விவசாயிகள் துப்பாக்கி வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. தமிழக அரசு, துப்பாக்கி உரிமம் பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தவேண்டும்.----