மீன்குஞ்சுகள் உற்பத்திக்கு உதவும் சீதோஷ்ணம்; அமராவதியில் 1.6 லட்சம் குஞ்சுகள் தயார்
உடுமலை; 'தகுந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், நடப்பு சீசனில் அமராவதி மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையில் இருந்து, பிற அணைகளில் வளர்க்க, 1.6 லட்சம் மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது,' என மீன் வளர்ச்சிக்கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.உடுமலை அமராவதி அணை அருகே, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகத்தின் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை செயல்பட்டு வருகிறது.இங்கு, கட்லா, ரோகு, மிர்கால் நாட்டின மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு, அமராவதி அணையிலும், பவானிசாகர் உள்ளிட்ட பிற அணைகளிலும் வளர்க்கப்படுகிறது.இங்குள்ள, 20 தொட்டிகளில், ஆண்டுக்கு, 3.50 லட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகளை மீன் வளர்ச்சிக்கழக அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.நடப்பாண்டு, முன்னதாகவே தென்மேற்கு பருவமழை துவங்கி, மீன்குஞ்சுகள் உற்பத்திக்கு சீதோஷ்ண நிலை தகுந்ததாக மாறியுள்ளது. இதனால், நடப்பு சீசனில், 1.6 லட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு, அணைகளில் விட தயார் நிலையில் உள்ளது.மீன் வளர்ச்சி கழகத்தினர் கூறியதாவது: நாட்டின மீன் இனங்களை பாதுகாக்கும் வகையில், அமராவதி அணைப்பகுதியில் இப்பண்ணை செயல்பட்டு வருகிறது.தேவைக்கேற்ப மீன் உற்பத்தியை அதிகரிக்க, ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயித்து, மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.ஜூன், ஜூலை மாதங்களில் பண்ணையில் தயாராகும் மீன்குஞ்சுகளை அணைகளில் வளர்க்க அனுப்பி வைக்கிறோம். அமராவதி பண்ணை தொட்டியில், நுண் மீன் குஞ்சுகள் விடப்பட்டு, 5 - 7 செ.மீ., அளவுக்கு குஞ்சுகள் வளர்ந்த பிறகே, அணைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தொடர்ச்சியாக மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு, அணைகளில் வளர்ப்பதால், நாட்டின மீன் இனங்கள் பாதுகாக்கப்படுகிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.