வாரந்தோறும் கொப்பரை ஏலம் தேவை! குடிமங்கலத்தில் எதிர்பார்ப்பு
உடுமலை : குடிமங்கலம் வட்டாரத்தில், 35 ஆயிரம் ஏக்கர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வட்டாரத்தில், பிரதான சாகுபடியாக உள்ளதால், தென்னை சார்ந்த தொழில்களும் அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அவ்வகையில், கிராமங்களில், உலர்களம் அமைத்து, தேங்காயை கொப்பரையாக மதிப்பு கூட்டி விற்பனை செய்கின்றனர். வியாபாரிகள் மட்டுமல்லாது பரவலாக விவசாயிகளும் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.இங்கு உற்பத்தியாகும் கொப்பரையை விற்பனைக்காக காங்கயம் உட்பட பகுதிகளுக்கு, விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். இதில், சிறு, குறு விவசாயிகள் கொப்பரையை சந்தைப்படுத்த காங்கயம் வரை செல்ல சிரமப்பட வேண்டியுள்ளது.முன்பு குடிமங்கலம் வட்டார தென்னை விவசாயிகளுக்காக பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. தென்னை வணிக வளாகம் என்ற பெயரில், கொப்பரை விற்பனைக்காக தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.தற்போது, எடை மேடை உட்பட வணிக வளாக கட்டமைப்புகள் பயன்பாடு இல்லாமல் உள்ளது.அரசு நிதி வீணாவதை தடுக்கவும்,தென்னை விவசாயிகள் தேவைக்காகவும் மீண்டும், பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் கொப்பரை ஏலம் நடத்த வேண்டும். இதனால், விவசாயிகள், வியாபாரிகள் என இருதரப்பினரும் பயன்பெறுவார்கள்.குறைந்தளவில் கொப்பரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அலைச்சல் தவிர்க்கப்படும்; கொப்பரை இருப்பு வைப்பதற்கான குடோன்களும் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் உள்ளது.எனவே,இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் விவசாயிகள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.