பாதுகாக்க வேண்டிய நன்செய் நிலங்கள்! சிறப்பு திட்டங்கள் அவசியம்
உடுமலை; பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய நன்செய் நிலங்களின் பரப்பு குறையாமல் இருக்க, அமராவதி ஆயக்கட்டு பகுதிக்கு சிறப்பு திட்டங்களை, அரசு செயல்படுத்த வேண்டும்.நீர்ப்பாய்ச்சல் ஆதாரம் மிகுந்து, நெல், கரும்பு, வாழை போன்ற பணப்பயிர்கள் பயிரிடப்படும் நிலங்கள் நன்செய் நிலங்கள் எனப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதி, முக்கிய நன்செய் நில கேந்திரமாக உள்ளது.இங்குள்ள பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, அணையிலிருந்து அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில், குமரலிங்கம், கண்ணாடிப்புத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார், காரத்தொழுவு பகுதிகளில், 4,686 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.முப்போகம் நெல் விளைவிக்கப்பட்டு வந்த இப்பகுதியில், பல்வேறு காரணங்களால், நெல் சாகுபடி பரப்பு குறையும் சூழல் உருவாகியுள்ளது.தற்போது, இந்த ஆயக்கட்டு பகுதியில், அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அடிப்படையில், குறுகிய கால நெல் ரகங்களை தேர்வு செய்து நடவு செய்கின்றனர். குறிப்பாக, 90 - 110 நாட்களில், அறுவடைக்கு தயாராகும், நெல் ரகங்களே இப்பகுதி விவசாயிகளின் முக்கிய தேர்வாக உள்ளது.சீசன் சமயங்களில், பாசன மேலாண்மை, நெல் விதை மற்றும் இடுபொருட்கள் வினியோகம், தொழில்நுட்ப ஆலோசனை, புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்துவது, அறுவடை மற்றும் இருப்பு வைப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே நன்செய் நிலங்களை பாதுகாக்க முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.கடந்த இரு சீசன்களாக நெல் சாகுபடியில் பரவிய நோய்த்தாக்குதல் விவசாயிகளை நஷ்டமடைய செய்துள்ளது. தொடர் நஷ்டத்தால், மாற்றுச்சாகுபடி குறித்து சிந்திக்க வேண்டிய நிலைக்கு நன்செய் நில விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'பல்வேறு காரணங்களால், நன்செய் நிலங்களின் பரப்பு குறைந்து வருகிறது. அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதியில், மண் கால்வாய்களை துார்வார வேண்டும். கழிவு நீர் பாசன நீருடன் கலக்கும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த மருந்துகளை மானியத்தில் வழங்க வேண்டும். கிராமம் வாரியாக சாகுபடி பரப்பை கணக்கிட்டு, உலர் களங்கள் கட்டிக்கொடுத்தால் நெல்லை காய வைக்க வசதியாக இருக்கும்,' என்றனர்.