கால்வாய்க்கு கம்பி வேலி என்னாச்சு! கிடப்பில் போடப்பட்டதால் அதிருப்தி
உடுமலை ; பி.ஏ.பி., கால்வாய், குப்பை கொட்டும் பகுதியாக மாறுவதை தடுக்க, பொதுப்பணித்துறை சார்பில் கம்பி வேலி அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.பி.ஏ.பி., உடுமலை கால்வாய் வாயிலாக நான்கு மண்டலங்களில், 58 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நடப்பு இரண்டாம் மண்டல பாசனத்தில், இந்த கால்வாய் வாயிலாக, 14,662 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்த கால்வாயில், போடிபட்டி, பள்ளபாளையம், அரசு கலைக்கல்லுாரி பின்பகுதி, கணக்கம்பாளையம், எஸ்.வி., புரம், எஸ்.வி., மில் உட்பட பகுதிகளில், கால்வாயில், அனைத்து வகையான குப்பைகளும் கொட்டப்படுகிறது.குறிப்பாக, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு கொட்டப்படுவதால், கால்வாயே காணாமல் போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பாசனத்துக்கு, கால்வாயில், தண்ணீர் திறக்கும் போது, இத்தகைய குப்பைகள், விளைநிலத்தில் தேங்குவதுடன், மண் வளத்தையும் பாதிக்கிறது. மேலும், பகிர்மான கால்வாய் ஷட்டர்களில், கழிவுகள் தேங்கி, தண்ணீர் விரயமும் அதிகரிக்கிறது.பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் முன், பொதுப்பணித்துறை சார்பில், அவசர கதியில், உடுமலை வாய்க்காலில் உள்ள குப்பைகள் அகற்றப்படுகின்றன.நீர் நிர்வாகம் மற்றும் மண் வளத்தை பாதிக்கும் இப்பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் தரப்பில், பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.பொதுப்பணித்துறை சார்பில், கால்வாயில், குப்பை கொட்டப்படுவதை தவிர்க்க, குறிப்பிட்ட இடங்களில், கம்பி வேலி அமைக்க திட்டமிடப்பட்டது. திட்டத்துக்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு, அரசு ஒப்புதலுக்கும் அனுப்பபட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பாசன திட்டத்தை பாதுகாக்க, உடனடியாக அரசு நிதி ஒதுக்கி, நடப்பு சீசனில், பணிகளை மேற்கொள்ள வேண்டும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.