தென்னையில் ஊடுபயிர் நடவை ஊக்குவிக்கும் திட்டம் என்னாச்சு! கண்துடைப்பான அரசின் பட்ஜெட் அறிவிப்பு
உடுமலை; 'தென்னை சாகுபடி தொடர் நோய்த்தாக்குதல் பிரச்னையில் இருந்து மீளாத நிலையில், ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவிக்க, அரசு வெளியிட்ட அறிவிப்புகளும் செயல்படுத்தப்படாமல் உள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். உடுமலை வட்டாரத்தில், 18,252; குடிமங்கலம் வட்டாரத்தில், 14,850, மடத்துக்குளத்தில், 6,262 ெஹக்டேர் பரப்பளவில், பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது. நீண்ட கால பயிராக பல லட்சம் தென்னை மரங்கள் இப்பகுதியில் மட்டும் பராமரிக்கப்பட்டு வருகிறது. தென்னை மரங்களில், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, வெள்ளை ஈ; கேரள வாடல் உள்ளிட்ட நோய்பரவலால், காய்ப்புத்திறன் இழந்த தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டி அகற்றி வருகின்றனர். தற்போது பராமரிக்கப்படும் தென்னை மரங்களிலும், நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த, மாதந்தோறும் பல ஆயிரம் ரூபாயை விவசாயிகள் செலவிட்டு வருகின்றனர். வெள்ளை ஈ தாக்குதலுக்கு, நேரடி மருந்து தெளிப்பு; வாடல் நோய்க்கு வேரில் மருந்து கட்டுதல் உள்ளிட்ட பல வழிமுறைகளை பின்பற்றினாலும், பலனில்லை. உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டதால், தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, சில மாதங்களாக விலை உச்சத்தில் உள்ளது. விலை உச்சத்தில் இருந்தாலும், தேங்காய் உற்பத்தி இல்லாததால், விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அதிகபட்ச உற்பத்தி இருக்கும் கோடை சீசனிலும், தேங்காய் உற்பத்தி சீராகவில்லை. வழிகாட்டுதல் இல்லை நோய்த்தாக்குதலையும் கட்டுப்படுத்த முடியவில்லை; வருவாய் இழப்பை சரி செய்ய, தென்னந்தோப்புகளில், ஊடுபயிர் சாகுபடி செய்து, நிலைமையை சீராக்க விவசாயிகள் முயல்கின்றனர். ஆனால், எவ்வித வழிகாட்டுதலும் இல்லை. பாசன மேலாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஊடுபயிர் சாகுபடி ஊக்குவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த வேளாண்துறை பட்ஜெட்டில், ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சி திட்டத்தில், சாகுபடி பரப்பு விரிவாக்கம், ஊடுபயிர் சாகுபடி, மறுநடவு மற்றும் புத்தாக்கம், செயல்விளக்க திடல், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக, 35.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்கணும் விவசாயிகள் கூறியதாவது: தென்னை விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேங்காய் உற்பத்தி குறைந்து ஓராண்டுக்கும் மேலாகிறது; வருவாயும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை சாகுபடி, கொப்பரை உற்பத்தி என இத்தொழிலில், நேரடியாகவும், மறைமுகமாகவும், வேலைவாய்ப்பு பெறும் ஆயிரக்கணக்கானோர் வேலை இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்க, ஊடுபயிர் சாகுபடிக்கு முக்கியத்துவம் தரப்படும் என, கடந்தாண்டு தமிழக அரசு அறிவித்தது. ஆனால், எவ்வித மானிய திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. ஜாதிக்காய், 'கோகோ' நாற்றுகளை மானியத்தில் வழங்க வேண்டும். இவ்வகை ஊடுபயிருக்கு தரமான நாற்றுகள் கிடைப்பதில்லை. குறைந்தபட்சமாக, ஊடுபயிர் சாகுபடிக்கு பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தாவது தோட்டக்கலைத்துறை, தென்னை ஆராய்ச்சி நிலையம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். ஊடுபயிர் சாகுபடி செய்தால், அவற்றுக்கு தனியாக சொட்டு நீர் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். தற்போதுள்ள சூழலில் கூடுதலாக செலவிட முடியாத நிலையில் உள்ளோம். தென்னை விவசாயத்தை காப்பாற்ற, தமிழக அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகும். திருப்பூர் மாவட்டத்தில், தென்னை சாகுபடி பரப்பு அதிகமுள்ள வட்டாரங்களை தேர்வு செய்து, வரும் வடகிழக்கு பருவமழை சீசனுக்கு முன், மானியத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.