உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துாய்மைக்காவலர் மகத்தான பணிக்கு மரியாதை வாழ்க்கை நிலை மேம்பட அரசு என்ன செய்ய வேண்டும்?

துாய்மைக்காவலர் மகத்தான பணிக்கு மரியாதை வாழ்க்கை நிலை மேம்பட அரசு என்ன செய்ய வேண்டும்?

கொரோனா பரவலுக்கு பின், சுற்றுப்புற சுகாதாரம் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.வீடு, கடை, ஓட்டல்கள் என, பல்வேறு இடங்களில் இருந்து டன் கணக்கில் வெளியேறும் குப்பைகளை சேகரித்து, அவற்றை அப்புறப்படுத்தும் மகத்தான பணியில் ஈடுபடும் துாய்மைக்காவலர்களுக்கு தீப ஒளி திருநாளில், உடை, இனிப்பு வழங்கி, மகிழ்வூட்டுவதில் பலர் திருப்தியடைகின்றனர்.

போதாத சம்பளம்

குமார், நகராட்சி தலைவர், திருமுருகன்பூண்டி: பூண்டி நகராட்சியில், 75 ஆண், 75 பெண் துாய்மைப் பணியாளர்கள் என, 150 பேருக்கு நகரமன்றத்தின் சார்பில், அவர்களுக்கான சீருடை, இனிப்பு, காரம் ஆகியவற்றை வழங்கினோம். கிராமப்புறங்களில், காலை, 6:00 மணிக்கெல்லாம் வேலைக்கு வருகின்றனர்.பெரும்பாலும், பெண் தொழிலாளர்களே துாய்மைப்பணியில் அதிகம் ஈடுபடுகின்றனர்.துாய்மைப் பணி தற்போது, 'அவுட்சோர்ஸிங்' பணியென்பதால், தினசரி சம்பளமாக, 440 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது; இந்த சம்பளம், அவர்களது குடும்பத்தை நடத்த போதுமானதாக இருக்காது. அவர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும்.

கூடுதல் பணிச்சுமை

பிரசாந்த்குமார், தலைவர் (பொறுப்பு), அவிநாசி ஊராட்சி ஒன்றியம்:சுகாதாரம் காப்பத்தில் துாய்மைப்பணியாளர்கள் மிகுந்த சிரத்தை எடுக்கின்றனர்; கஷ்டப்படுகின்றனர்.அவர்கள் செய்யும் வேலையை வேறு யாராலும் செய்ய முடியாது; அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டியது நம் கடமை. அவர்களுக்கு வழங்கப்படும் குறைவான சம்பளத்தை வைத்து, அவர்களால் குடும்பம் நடத்துவது சிரமம். கிராம ஊராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப துாய்மைப்பணியாளர் எண்ணிக்கையும் இல்லை; 3 பேர் செய்யக்கூடிய வேலையை ஒருவர் செய்கிறார். இதனால், அவர்களுக்கு பணிச்சுமை, மனச்சுமை ஏற்படுகிறது. துாய்மைக்காவலர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

குறைந்த பணியாளர்

அன்பகம் திருப்பதி, எதிர்க்கட்சி தலைவர், திருப்பூர் மாநகராட்சி: எனது வார்டில் துாய்மைப்பணியில் ஈடுபடும், துாய்மைப்பணியாளர்களுக்கு உடை, இனிப்பு, ஊக்கத்தொகை வழங்கி அவர்களை கவுரவித்தோம்.திருப்பூர் மாநகராட்சியை பொறுத்தவரை துாய்மைப் பணியாளர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ., தொகை சரியான முறையில் பிடித்தம் செய்து, அவர்களுக்கு தேவையான நேரத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 'அவுட்சோர்ஸிங்' முறையில் துாய்மைப்பணி நடக்கும் நிலையில், 600 முதல், 800 பேர் பணி செய்ய வேண்டிய இடத்தில், 400 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். குப்பையை தரம் பிரித்து அகற்றும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நவீன தொழில்நுட்ப முறையில் நடை முறைப்படுத்தினால் மட்டுமே, துாய்மைப்பணியாளர்கள் பணிச்சுமை குறையும்.

காப்பீடு அவசியம்

பழனிசாமி, ஊராட்சி தலைவர், கோடங்கிபாளையம்: ஊராட்சிகளில், 150 வீடுகளுக்கு ஒரு துாய்மைப்பணியாளர் என்ற உத்தரவு நடைமுறையில் இல்லை.கிராமங்களை துாய்மையாக வைத்துக் கொள்வதில் துாய்மைப் பணியாளர்களின் பங்களிப்பு முக்கியம்; அவர்களுக்கான ஊதியம், மிகக்குறைவு. அவர்களுக்கான கையுறை, சீருடை உள்ளிட்ட உபகரணங்கள் சரியான முறையில் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஊராட்சிக்கு அதிகாரம்

ஷீலா புண்ணியமூர்த்தி, ஊராட்சி தலைவர், செம்மிபாளையம்: துாய்மைப்பணியாளர்கள் பற்றாக்குறையால், கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.மக்கள் தொகைக்கேற்ப துாய்மைப் பணியாளர்களை நியமிக்க, ஊதியம் வழங்க ஊராட்சிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். துாய்மைப் பணியாளர்களும் மனிதர்கள் தான் என்பதை உணர்ந்து, குப்பையை தரம் பிரிப்பதற்கு உண்டான நவீன தொழில்நுட்பம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஊராட்சிகளிலும் முழு அளவில் செயல்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

DJ Serve Life
நவ 30, 2024 15:23

மரியாதைக்குரிய அவர்களுக்கு அடிப்படை ஊதியம், பென்ஷன் திட்டம், காப்பீடு திட்டம், சேமிப்பு திட்டம், விடுமுறை, ரெயின் கோட், பெட் சீட், டார்ச், உபகரணம், சிறு சுமை வாகன பயன்பாடு முதலியவற்றை அரசு ஒன்றிய அரசிடம் கோரலாம்.


புதிய வீடியோ